உங்களால் உண்மையிலேயே பாரபட்சமின்றி இருக்க முடியுமா? 🧐
தேவன் உங்களை எந்த வழியில் நடத்துகிறார் என்பதைக் கண்டறிய முயன்று, உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு முச்சந்தியில் நின்றிருக்கிறீர்களா? ஒருவேளை எதைப் படிப்பது, யாரைத் திருமணம் செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையைத் தொடருவதா வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டியிருந்த தருணங்களில் அப்படி உணர்ந்திருக்கலாம்.
இத்தகைய பெரிய முடிவுகளை நாம் எடுக்க வேண்டியிருக்கும் போது, தேவனுடைய வழிநடத்துதலைத் தேடவும் அவருடைய சத்தத்தைக் கேட்கவும் நாம் நேரத்தை ஒதுக்க வேண்டும்.
ஆனால் நேர்மையாகச் சொல்லவேண்டுமானால், தேவன் என்ன சொல்கிறார் என்பதை பகுத்தறிய முயலும்போது மனதை நடுநிலையாக வைத்திருப்பது மிகவும் கடினம்.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒருவரைத் தலைகால் புரியாமல் காதலித்துக் கொண்டிருந்தால், "அவரை விட்டு விலகிவிடு" அல்லது "காத்திரு" என்று தேவன் சொல்வதைக் கேட்க உங்கள் மனம் இடம் கொடுக்காமல் போகலாம். அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஒரு வேலை உங்களைத் தேடி வரும்போது, அந்த வாய்ப்பை விட்டுவிடும்படி தேவனுடைய சத்தம் மென்மையாக உங்களை வற்புறுத்தினால், "நாம் தவறாகக் கேட்டுவிட்டோமோ" என்று நீங்கள் நினைக்கலாம்.
இத்தகைய சூழ்நிலைகளில், மற்ற விசுவாசிகள் மூலம் பேசுவதற்குத் தேவன் தேர்ந்தெடுக்கலாம், மேலும் அவர்களின் ஆலோசனையைத் தேடுவது ஞானமானதாகும்.
“ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.” – நீதிமொழிகள் 15:22
கேம்ரனும் நானும் எங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடமாற்றத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டியிருந்தபோது, எங்கள் நண்பர்களாகவும் ஆவிக்குரிய தலைவர்களாகவும் நாங்கள் கருதிய நான்கு பேரிடம் எங்களுக்காக தேவனைத் தேடி ஜெபிக்கும்படி கேட்டோம். நாங்கள் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது என்று மட்டும் அவர்களிடம் சொன்னோம், ஆனால் அது என்னவென்று சொல்லவில்லை.
ஒரு வாரத்திற்குப் பிறகு, நாங்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்திக்கத் திட்டமிட்டோம், அவர்கள் நால்வருமே எங்களுக்காக தேவனிடமிருந்து ஒரே மாதிரியான வார்த்தையைப் பெற்றிருந்தார்கள். இது ஆச்சரியமாக இல்லையா?!
அது நாங்கள் ஏற்கனவே உணர்ந்திருந்த காரியத்தோடும் ஒத்துப்போனது, மேலும் நாங்கள் சரியான முடிவைத்தான் எடுக்கிறோம் என்பதற்கு அது ஒரு பெரிய உறுதிப்படுத்துதலாக அமைந்தது.
தேவனுடைய சார்பாக உங்கள் வாழ்க்கையில் ஆலோசனைகளைக் கூறக்கூடிய மனிதர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா? ஆவிக்குரிய ரீதியில் வளர்ச்சியடைந்த, பாரபட்சமில்லாத மற்றும் உங்கள் முடிவுகளில் சொந்த விருப்பத்தைத் திணிக்காத, தேவனுடைய சத்தத்தைக் கேட்கக்கூடிய விசுவாசிகள் உங்களுக்கு உண்டா?
அப்படி இல்லையென்றால், அத்தகைய ஆலோசனையாளர்களை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும்படி இன்று தேவனிடம் கேளுங்கள்.