"ஆண்டவர் என்னிடம் சொன்னார்" என்று யாராவது கூறும்போது நான் ஏன் சந்தேகப்படுகிறேன்?
இந்த வாரம், தேவன் நம்மிடம் பேசும் பல்வேறு வழிகளில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். வேதாகமம் முழுவதிலும், தேவன் தம் மக்களுடன் தொடர்பு கொண்டதை நாம் காண்கிறோம்.
ஆதாமுடன் ஏவாளும் தோட்டத்தில் பிதாவோடு உலாவி வந்தார்கள் (ஆதியாகமம் 3:8). மோசே ஒரு நண்பனுடன் பேசுவது போல ஆசரிப்புக் கூடாரத்தில் அவரோடு பேசினார். (யாத்திராகமம் 33:11). சீஷர்கள் இயேசுவைப் பின்பற்றி, அவரோடு உரையாடி, அவருடைய போதனைகளைக் கேட்டார்கள் (உதாரணத்திற்கு சுவிசேஷங்களில், மாற்கு 6).
ஆனால் இயேசு சீஷர்களை விட்டுப் பிரிந்து பரலோகத்திற்கு ஏறிச் செல்வதற்கு முன், அவர்கள் தொடர்ந்து அவரோடு தொடர்பில் இருக்க ஒரு புதிய வழியை வாக்குறுதி அளித்தார்: அதுதான் பரிசுத்த ஆவியானவர்.
"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." – யோவான் 16:13
பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசிகள் அல்லது போதகர்களிடம் மாத்திரம் பேசுவதில்லை, அவர் எல்லாரிடமும் பேசுகிறார். நாம் அனைவரும் அவருடைய வழிநடத்துதலைப் பெற முடியும். இருப்பினும், பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் பேசுவதாக நீங்கள் உணரும்போதெல்லாம், அதை சோதித்துப் பார்ப்பது எப்போதும் முக்கியம்.
"தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்." – 1 தெசலோனிக்கேயர் 5:20-22
"இது வேதாகமத்தோடு ஒத்துப்போகிறதா?", "இது எனக்கு சமாதானத்தைத் தருகிறதா?", "இது அவமானத்தையோ அல்லது குற்ற உணர்வையோ அதிகரிக்கிறதா?" என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். தேவன் தமது ஆவியின் மூலமாக உங்களிடம் பேசுகிறாரா அல்லது பிசாசு உங்கள் மனதைக் குழப்ப முயலுகிறானா என்பதைக் கண்டறிய இவை அனைத்தும் முக்கியமான அறிகுறிகளாகும்.
இன்னொரு விஷயத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விருப்பத்திற்கு மாறாக, கிறிஸ்தவ உலகில் மக்கள் தாங்கள் நேரடியாக தேவனிடமிருந்து கேட்டதாகக் கூறுவதும், ஆனால் பின்னர் அது தேவனிடமிருந்து வந்ததல்ல என்று கண்டறிவதும் பலமுறை நடக்கிறது. சமீப ஆண்டுகளில், தீர்க்கதரிசனம் என்றப் போர்வையில் மக்களை திட்டமிட்டுத் தவறாக வழிநடத்திய பல போலித் தீர்க்கதரிசிகள் அம்பலமாக்கப்பட்டதையும் நாம் கண்டிருக்கிறோம்.
மற்றொரு விசுவாசி மூலமாக தேவனிடமிருந்து ஒரு தீர்க்கதரிசனத்தையோ அல்லது வார்த்தையையோ நீங்கள் பெறும்போது, அவர் எவ்வளவு ஆவிக்குரியவராகவோ, முக்கியமானவராகவோ அல்லது பிரபலமானவராகவோ இருந்தாலும் சரி, எப்போதும் அதை சோதித்துப் பார்த்து, தேவனிடம் உறுதிப்படுத்துதலைக் கேளுங்கள்.
தேவன் உங்களிடம் பேச விரும்பினால், அவர் அதைத் தெளிவாகவும் தொடச்சியாகவும் உங்களுக்கு வெளிப்படுத்துவார். யாரோ ஒருவர் "தேவன் என்னிடம் சொன்னார்" என்று சொல்வதாலேயே ஒரு வார்த்தை உண்மையாகிவிடாது. ஒருவர் உண்மையிலேயே தேவனுடைய ஊழியக்காரராக இருந்தால், அவர்கள் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் சோதித்துப் பார்க்க உங்களை ஊக்குவிப்பார்கள், மேலும் நீங்கள் அவர்களைக் குருட்டுத்தனமாக பின்பற்றவில்லை என்றால் அவர்கள் கோபப்பட மாட்டார்கள்.
இந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் பெற்ற தீர்க்கதரிசனங்களைப் பற்றி உங்களுக்குக் குழப்பம் இருந்தாலோ, தயவுசெய்து எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்.