விமானப் பயணத்தின் மீதான பயம் எனக்கு எதைச் சொல்லிக் கொடுத்தது?
நான் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்…
இதுவரை நான் நூற்றுக்கும் மேற்பட்ட முறை விமானத்தில் பயணம் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்கள், மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய விமானங்கள், மிகக் குறுகிய மற்றும் மிக நீண்ட நேரப் பயணங்கள், நிலப்பரப்பிற்கு மேலாகவும் கடல்களுக்குக் குறுக்காகவும் என பல பயணங்கள் செய்திருந்தாலும், எனக்கு இன்னும் விமானப் பயணம் என்றால் பயமாகத்தான் இருக்கிறது. 🤦🏻♂️
குறிப்பாக விமானம் மேலே எழும்பும்போதும் (take-off) மற்றும் தரை இறங்கும்போதும் (landing), எனக்கு ஒருவித நடுக்கம் ஏற்படும், உள்ளங்கைகள் வேர்க்கத் தொடங்கும். பல ஆண்டுகளாக என் பதற்றத்தைக் கட்டுப்படுத்த நான் பழகிக்கொண்டாலும், இப்போதும் அந்த பயம் எனக்கு இருக்கிறது. பாதுகாப்பாக தரை இறங்கியவுடன் நான் எப்போதும் மிகப்பெரிய நிம்மதி அடைவேன்.
விமானத்தில் பறக்கும்போது பொதுவாக என் நினைவுக்கு வரும் எண்ணங்களுள் ஒன்று: "இந்த விமானத்தை யார் ஓட்டுகிறார்கள் என்று எனக்குத் தெரியவே தெரியாது."
அதை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் விமானத்தில் ஏறும்போது பொதுவாக விமானியைப் பார்ப்பதில்லை, அவருடைய சுயவிவரக் குறிப்பை பெறுவதில்லை, அவருடைய சான்றிதழ்களைச் சரிபார்ப்பதில்லை, அவருடைய திறமைகளை சோதிப்பதில்லை, ஏன், அவருடன் பயணம் செய்யச் சம்மதிக்கும் முன் அவருடைய பெயரைக் கூட நீங்கள் அறிவதில்லை.
ஆனாலும், நாம் அறியாத ஒருவர் நம்மை ஆகாயத்தில் ஏற்றிச் செல்வதற்கு நாம் நம் இருக்கைகளில் அமர்ந்து அனுமதிப்பதை முற்றிலும் இயல்பான ஒன்றாகவே கருதுகிறோம். இதன் சுருக்கம் என்னவென்றால், நாம் விமானிகளைப் பார்ப்பதில்லை, ஆனால் அவர்களை நம்புகிறோம். அவர்கள் நம்மைப் பாதுகாப்பாக கொண்டு போய்சேர்க்கும் எண்ணத்தையும் திறமையையும் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் நம்புகிறோம்.
அதேபோல், நாம் கண்ணால் காண முடியாத ஒரு தேவனைப் பின்பற்றி வருகிறோம். அவர் நம்மைச் சரியாக எங்கே நடத்துகிறார் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவர் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதையும், நம் ஒவ்வொருவருக்கான பயணத் திட்டத்தை – அதாவது வாழ்க்கைத் திட்டத்தை – அவர் அறிந்திருக்கிறார் என்பதையும் நாம் நம்பலாம்.
“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” – எரேமியா 29:11
எனக்கு விமானப் பயணத்தின்போது ஏற்படும் அதே பதற்றம் உங்கள் வாழ்க்கையைப் பற்றியும் உங்களுக்கு எப்போதாவது ஏற்படுகிறதா? நம் வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத விமானியாகிய தேவனை உண்மையிலேயே நம்ப முடியுமா என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?
அப்படி உணருவது இயல்பானதே. உங்கள் வாழ்க்கையில் அவருடைய பிரசன்னத்தையும், அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற உண்மையையும் உங்களுக்கு நினைவூட்டும்படி இன்று தேவனிடம் கேளுங்கள்.