எனக்குப் பிடிக்காத விடுமுறை நாள்
வருகிற ஞாயிற்றுக்கிழமை, நாம் அன்னையர் தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த தினம் எனக்கு எவ்வளவு கடினமானது என்பதைப் பற்றி நான் இதற்கு முன்பு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளேன், ஆனால் இங்கே நமது ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ பகுதியில் அதைப் பற்றி நான் எழுதியதில்லை. இந்த வாரம் நான் அதைச் செய்யப் போகிறேன்.
முதலில், நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: எனது அம்மா, மாமியார் மற்றும் என் வாழ்க்கையிலுள்ள மற்ற அனைத்து அம்மாக்களுக்காகவும் நான் மிகுந்த நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள், அது முக்கியமானது என்று நான் நம்புகிறேன்.
அதே சமயம், என்னைப் பொறுத்தவரை, அன்னையர் தினம் என்பது ஒரு தாயாக நான் இழந்த அனைத்தையும் ஆண்டுதோறும் எனக்கு நினைவூட்டும் ஒரு கசப்பான தினமாக இருக்கிறது. ஜாக் (Zac) உடல்நிலை பாதிக்கப்பட்டு, எங்கள் வாழ்க்கை நிரந்தரமாக மாறுவதற்கு முன்பு, ஒரு புதிய, பெருமைமிக்க, மகிழ்ச்சியான அம்மாவாக ஒரே ஒரு முறை மட்டுமே என்னால் இதைக் கொண்டாட முடிந்தது.
ஜாக்கின் உடல் நிலையை சமாளித்து வந்த அந்த ஆண்டுகளில், நான் ஒரு அம்மாவாக உணர்ந்தது மிகக் குறைவு. நான் ஒரு செவிலியாக, ஒரு பராமரிப்பவளாக, ஒரு சிகிச்சைஅளிப்பவளாக, சில சமயங்களில் ஒரு மருத்துவராகக் கூட உணர்ந்துள்ளேன். என்னால் "சாதாரண அம்மாக்கள் செய்யும் காரியங்களை" செய்ய முடியவில்லை. ஜாக்கால் என்னை "அம்மா" என்று கூட அழைக்க முடியவில்லை.
இப்போது, ஜாக் (Zac) இறந்துவிட்டதால், அன்னையர் தினம் என்பது வேதனை நிறைந்த நாட்களில் ஒன்றாக மாறிவிட்டது; "பிள்ளை இல்லாத ஒரு தாயாக எப்படி அன்னையர் தினத்தைக் கொண்டாடுவது?" என்று நான் வேதனையோடு யோசிப்பதுண்டு. இதற்கு யாரும் நம்மைத் தயார்படுத்துவதில்லை.
ஒருவேளை எனது கதியில் உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ள முடியலாம். அல்லது அன்னையர் தினம் உங்களுக்கு கடினமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் தனிமையாக இருப்பதால் காதலர் தினமோ, அல்லது கொண்டாடுவதற்குத் துணையாக குடும்பம் இல்லாததால் கிறிஸ்துமஸோ, அல்லது உங்கள் வேதனையைத் தூண்டக்கூடிய பிறந்தநாள், குடும்ப விசேஷங்கள் அல்லது திருமணங்கள் போன்ற வேறு ஏதேனும் நிகழ்ச்சி நாட்கள் உங்களுக்குக் கடினமாக இருக்கலாம்.
அந்தக் கடினமான நாட்களை கடந்து செல்ல எனக்கு உதவிய சில விஷயங்களை இந்த வாரம் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு துன்பங்களுக்கு அந்நியமானவர் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
“அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்.” – ஏசாயா 53:3
நீங்கள் எதைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதை யாராவது ஒருவரால் புரிந்துகொள்ள முடியும் என்றால், அது இயேசுவால் மட்டுமே முடியும். உங்கள் வேதனையை ஜெபத்தில் அவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.