கோபத்திற்கு பதிலாக வருவது எது?
இந்த வாரம், நமது 'அதிசயங்கள்’ வழக்கத்தை விட சற்று அதிகமாகவே தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நான் மிகவும் வேதனையுடன் எதிர்கொள்ளும், அதிலும் குறிப்பாக ஜாக் (Zac) மறைவிற்குப் பிறகு இன்னும் பாரமாகத் தோன்றும் இந்த அன்னையர் தினம் நெருங்கி வரும் வேளையில், இத்தகைய கடினமான நாட்களைக் கடந்து செல்ல எனக்கு உதவிய சில காரியங்களை நான் உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன்.
ஜாக்கின் அந்தப் பயண காலம் முழுவதும் என்னைத் தொடர்ந்து ஆட்கொண்டிருந்த ஒரு உணர்ச்சி 'கோபம்'. எங்களது விடாப்பிடியான ஜெபங்களுக்குப் பிறகும், தேவன் இதில் தலையிடாமல் இப்படி நடக்க அனுமதித்ததற்காக நான் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தேன். அறிகுறிகளை கவனிக்கத் தவறி, நிலைமை மோசமடையக் காரணமாயிருந்த மருத்துவர்கள் மீது எனக்குக் கோபம் இருந்தது. என் குழந்தையைப் பாதுகாக்கத் தவறியதற்காக என் மீதே எனக்கு கோபம் இருந்தது. ஜாக்கின் உடல் மீது கூட எனக்குக் கோபம் வந்தது. இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திய அந்த வைரஸை எதிர்த்து அவனது உடல் ஏன் போராடவில்லை?, என்று.
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், நடந்ததைத் தடுக்க யாராலும் எதையும் மாற்றி செய்திருக்க முடியாது. என் கோபங்கள் எதுவுமே நியாயமானவை அல்ல, ஆனால் கோபமே அப்படிப்பட்டதுதானே? அது அரிதாகவே தர்க்கரீதியானதாக இருக்கும்.
நான் அந்த உணர்ச்சிகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதையும், இறுதியில் அதை விட்டுவிட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தேன். இது ஒரு நீண்ட மற்றும் கடினமான பயணம். இதற்கு ஒரு தொழில்முறை ஆலோசகரின் (professional counsellor) உதவி எனக்குத் தேவைப்பட்டது. அந்தப் பயணத்தை பற்றி ஒரு நாள் நான் விரிவாக பகிர்ந்துகொள்கிறேன்.
ஆனால், ஒரு கட்டத்தில் நான் அந்த கோபத்தை விட்டுவிடத் தயாரானேன். என் கோபத்திலிருந்து நான் மனந்திரும்பினேன்; அப்போது எனக்குள் ஒருவித... வெறுமை ஏற்பட்டதை நான் இன்றும் உணர்கிறேன்.
கோபம் என்பது ஒரு சக்திவாய்ந்த சமாளிக்கும் கருவியாகவோ அல்லது ஒரு உந்துதலாகவோ கூட இருக்கலாம். ஆனால் நான் அதை சரணடையச் செய்தவுடன், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அது என் வாழ்வின் ஒரு பெரிய பகுதியாக மாறிவிட்டிருந்தது.
சில நாட்களுக்குப் பிறகு, நான் தேவனிடம், “சரி, நான் என் கோபத்தை விட்டுவிட்டேன், ஆனால் இப்போது அதற்குப் பதிலாக எனக்குள் என்ன வரும்?” என்று கேட்டேன். அவர் ஒரு எளிய வார்த்தையில் பதிலளித்தார்: “நன்றியுணர்தல்”, என்று.
இதை நானே கூட யோசித்திருக்கும் அளவிற்கு, மிகவும் எளிமையான ஒரு விஷயம். நன்றியுடன் இருப்பதன் வலிமையையும் முக்கியத்துவத்தையும் தேவன் எனக்கு நினைவூட்டினார்.
இதை நான் மட்டும் சொல்லவில்லை, வேதாகமமும் இதையே சொல்கிறது:
"எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." – 1 தெசலோனிக்கேயர் 5:18
எனது வேதனையில் மூழ்கியிருப்பதற்கு பதிலாக, நான் நன்றியுள்ளவளாக இருக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் பட்டியலிடத் தொடங்கினேன். நான் அப்படிச் செய்தபோது, என் கோபம் விட்டுச் சென்ற அந்த பாழ்நிலத்தை தேவனுடைய சமாதானம் நிரப்புவதை நான் உணர்ந்தேன்.
நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் பட்டியலிட இன்று ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்.