❤️ 👀
உங்கள் தோற்றத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டதுண்டா?
சமீபத்திய (fashion) நாகரீக போக்குகளைப் பின்பற்றுவதை நான் விரும்புகிறேன், குறிப்பாக நான் மேடையில் இருக்கும்போது எப்போதும் அழகாக தோற்றமளிக்கவே முயற்சி செய்கிறேன். இதற்காக நான் என் அம்மாவுக்கும், அவருடைய கிழக்கு இந்திய கத்தோலிக்கப் பாரம்பரியத்திற்கும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். சபைக்குச் செல்லும்போது எப்போதும் சிறந்த ஆடைகளையே அணிய வேண்டும் என்று எங்களிடம் கூறுவார்; என் அம்மாவும் தனது சிறந்த நகைகளை அணிந்து கொண்டு, “நான் ராஜாவின் மகள், அதற்கு ஏற்றவாறு நான் இருக்க விரும்புகிறேன்” என்று சொல்வார்.
மறுபுறம், சில கிறிஸ்தவர்கள் மிகவும் எளிமையான ஆடைகளை அணிவதன் மூலம் தேவனை ஆராதிக்கிறார்கள்; பெண்கள் ஆபரணங்களை அணியக்கூடாது என்றும், எளிமையான, அடக்கமான தோற்றமே தேவனுக்கு கனத்தைக் கொடுக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள் (1 பேதுரு 3:3-ஐ அடிப்படையாகக் கொண்டு).
ஒன்று மற்றொன்றை விடச் சிறந்தது என்று நான் நினைக்கவில்லை. இறுதியில், இருதயமே முக்கியமானது. அதைத்தான் தேவனும் பார்க்கிறார்:
"கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்." – 1 சாமுவேல் 16:7
மனிதர்கள் நமது வெளிப்புற தோற்றத்தைப் பார்க்கலாம், ஆனால் தேவன் இருதயத்தைப் பார்க்கிறார். அதை நான் நேசிக்கிறேன்!
உங்கள் எண்ணங்கள், பயங்கள், அமைதியான ஜெபங்கள் மற்றும் சத்தமாக வெளியே கேட்க பயப்படும் கேள்விகள் கூட உங்கள் இருதயத்தில்தான் இருக்கின்றன. தேவன் அவை அனைத்தையும் பார்க்கிறார். உங்களை குற்றப்படுத்துவதற்காக அல்ல, மாறாக நீங்கள் அவற்றைப் பற்றி உணர்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவே.
தாவீது இவ்வாறு ஜெபித்தார்:
"தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்." – சங்கீதம் 139:23-24
தேவன் இன்று உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கவும், அதை உங்களுக்கும் வெளிப்படுத்தவும் அவரை அனுமதியுங்கள். தாவீதைப் போலவே, உங்களிடம் இருக்கும் வேதனை உண்டாக்கும் வழிகள் ஏதேனும் இருந்தால் அதை வெளிப்படுத்தும்படி தேவனிடம் கேளுங்கள், அவற்றை அவரிடம் ஒப்படையுங்கள்.
தேவன் உங்கள் இருதயத்தைப் பார்ப்பது மட்டுமல்லாமல், அதைத் தூய்மையாக்கவும் விரும்புகிறார்.