எதிர்காலத்தை நம்மால் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! 📆
இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? அவ்வப்போது நமது எதிர்காலத்தை ஒருமுறை எட்டிப் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சும்மா ஒரு ஆர்வத்திற்காகத்தான். 😇
துரதிர்ஷ்டவசமாக நம்மால் அதைச் செய்ய முடியாது, ஒருவேளை அதுவே நமக்கு நல்லது போலிருக்கிறது. எதிர்காலத்தைப் பார்க்கும் திறன் நமக்குத் தேவை என்று தேவன் நினைத்திருந்தால், நிச்சயமாக அதை அவர் நமக்குக் கொடுத்திருப்பார்.
அதற்கு பதிலாக, ஒவ்வொரு நாளும் நமக்குத் தேவையானவை கிடைக்கும் என்று அவர் நமக்கு உறுதியளித்திருக்கிறார்.
"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்." – புலம்பல் 3:22-24
இருப்பினும், தேவனால் நமது எதிர்காலத்தைப் பார்க்க முடியும். நமக்காக என்ன காத்திருக்கிறது என்பதை அவர் சரியாக அறிவார், மேலும் அவர் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்:
"நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." – எரேமியா 29:11
நம்மால் பார்க்க முடியாத அந்த முழுமையான சித்திரத்தை தேவன் பார்க்கிறார் என்பதை அறிவது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. சில நேரங்களில் நமது சூழ்நிலைகளால் நாம் நிலைகுலைந்து போகலாம் அல்லது சில காரியங்கள் ஏன் இப்போது நமக்கு நடக்கின்றன என்று நாம் யோசிக்கலாம்.
ஆனால் தேவன் அந்தச் சோதனைகளை எப்படியெல்லாம் நமது நன்மைக்காகப் பயன்படுத்தப்போகிறார் என்பதை இப்போதே பார்த்துக்கொண்டிருக்கிறார்.
"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." – ரோமர் 8:28
உங்களது தற்போதைய சூழ்நிலையிலிருந்து வெளியேற வழியே இல்லை என்று நீங்கள் போராடிக்கொண்டிருக்கிறீர்களா? எதிர்காலம் சில நேரங்களில் நம்பிக்கையற்றதாகத் தோன்றுகிறதா? நீங்கள் தனிமையில் இல்லை!
எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள், ஜெபம் மற்றும் ஊக்கப்படுத்துதலின் மூலம் நாங்கள் உங்களோடு இணைந்து நிற்க விரும்புகிறோம்.