நீங்கள் மதிக்கப்படாதது போல் உணருகிறீர்களா?
உங்கள் முயற்சிகள் அனைத்தும் யாராலும் கவனிக்கப்படாமல் போவதாகவோ அல்லது நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் நல்ல காரியங்கள் பாராட்டப்படாமல் போவதாகவோ எப்போதாவது உணர்ந்ததுண்டா?
உங்களுக்காக ஒரு நற்செய்தி: தேவன் அதைக் காண்கிறார்! நீங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம், ஆனால் பரலோகம் எதையும் தவறவிடுவதில்லை.
"ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." – எபிரெயர் 6:10
யாரும் நம்மைப் பார்க்கவில்லை அல்லது பாராட்டவில்லை என்று உணரும்போது அது ஏமாற்றமாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்யும்போது, அது உண்மையில் அப்படிதான் இருக்க வேண்டும்.🤔
இயேசு நமக்கு இவ்வாறு போதிக்கிறார்:
“மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.”........ “நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.” – மத்தேயு 6:1,3-4
நமது நற்கிரியைகளால் நாம் இரட்சிக்கப்பட முடியாது (எபேசியர் 2:8-9), ஆனால் தேவன் அவற்றுக்குப் பலன் அளிக்கிறார்!
யாராவது ஒருவருக்கு ஊக்கமளிக்கும் ஒரு குறிப்பை எழுதி வைப்பதோ, வீடற்ற ஒருவருக்கு சிறிதளவு பணம் கொடுப்பதோ அல்லது ஒரு நண்பரின் வீட்டிற்கு அவர்கள் அறியாமல் உணவை ஆர்டர் செய்து அனுப்புவதோ போன்ற எளிய காரியங்களாக இது இருக்கலாம்.
இன்று நீங்கள் மற்றவர்களுக்கு மறைந்திருந்து செய்யக்கூடிய நற்கிரியைகள் என்னென்ன?
நினைவில் கொள்ளுங்கள், தேவன் அவற்றைப் பார்க்கிறார், மேலும் அவர் உங்களில் பிரியமாயிருக்கிறார்.