இதைக்கொண்டு உங்கள் இதயத்தை நிரப்புங்கள்…
இயேசுவின் வாழ்க்கையில் அவர் கடந்து வந்த ஒரு குறிப்பிட்ட 24 மணிநேரத்தைப் பற்றி கடந்த இரண்டு நாட்களாக நாம் சிந்தித்து வருகிறோம்.
இயேசு அன்று சந்தித்த பல அழுத்தங்களுக்கு மத்தியிலும், அவர் எப்படி ஒரு நிறைவான இருதயத்தோடு மற்றவர்களுக்கு ஊழியம் செய்தார் என்பதைப் பற்றியும், நாமும் அவரைப் போலவே எப்படிச் செய்யலாம் என்பதைப் பற்றியும் இன்று நாம் சிந்திப்போம்.
இயேசு மக்களைத் தடைகளாகப் பார்க்காமல், வாய்ப்புகளாகப் பார்த்தார். அவர்களின் தேவைகளையும் வலியையும் கண்டு அவர் அவர்கள் மேல் மனதுருகினார். மாற்கு இவ்வாறு கூறுகிறார்:
"இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்." – (மாற்கு 6:34)
அவர்களது வேதனைக்கு எதிர்வினையாக, "அவர் அவர்களுக்கு அநேக காரியங்களைப் போதிக்கத்தொடங்கினார்."
'மனதுருக்கம்' (compassion) என்பதைக் குறிக்கும் ‘splanchnizomai’ என்ற கிரேக்க வார்த்தைக்கு, ஒருவருடைய வலியைத் தனது உள்ளத்தின் ஆழத்தில் உணருவது என்று பொருள். இயேசு தான் சந்தித்தவர்களின் வலியைத் தனது உள்ளத்தின் ஆழமான பகுதியில் உணர்ந்தார்—அதற்கு அவர் அன்பினாலும் குணமளிப்பதினாலும் பதிலளித்தார்.
நிறைவான இருதயத்தோடு ஊழியம் செய்ய, முதலில் நாம் நம்முடைய இருதயங்களை தேவனுடைய அன்பினால் நிரப்ப வேண்டும். நாம் உண்மையிலேயே தேவனோடு இணைந்திருக்கும்போது, அவர் நம்மைத் தனது பலத்தினால் நிரப்புகிறார், மேலும் மற்றவர்களுக்கு சிறப்பாக சேவை செய்ய நம்மைத் தகுதிப்படுத்துகிறார்.
நினைவில் கொள்ளுங்கள், நமது அழைப்பு மற்றும் ஆர்வத்திற்கு வெளியே நாம் அதிக நேரத்தைச் செலவிடும்போதுதான் மனஅழுத்தம் உண்டாகிறது. இயேசு மிக முக்கியமான விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். அவர் எவ்வித தயக்கமுமின்றி மக்கள் மீதும், தேவனோடு அவர்களுக்கு இருந்த பயணத்தின் மீதும் கவனம் செலுத்தினார். மக்களை மீட்பதும் அவர்களை சீர்ப்படுத்துவதுமே இந்த இரட்சகரின் முதல் முன்னுரிமையாக இருந்தது; அவர் அதை அன்போடு செய்தார்; பிதாவாகிய ஆண்டவர் அவர் மேல் வைத்திருந்த அன்பு, அவரிடம் இருந்து மற்றவர்களுக்கும் வழிந்தோடியது.
நாம் ஜெபிப்போம்:
பரலோகப் பிதாவே, உமது அன்பினாலும் இரக்கத்தினாலும் என் இருதயத்தை நிரப்பும். உமது அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளாக மக்களைப் பார்க்க எனக்கு உதவி செய்யும். இயேசு செய்தது போலவே, ஒரு நிறைவான இருதயத்திலிருந்து ஊழியம் செய்ய எனக்கு பலத்தைத் தாரும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.