எதுவுமே இல்லாததற்கு நன்றி (இதுவரை)!
மத்தேயு 14:17-21 ல், இயேசுவும் அவருடைய சீஷர்களும் தங்களுக்கு முன்னால் இருந்த 5,000 பேருக்கு உணவளிக்க, தங்களின் வசம் இருந்த ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த ஒரு சூழ்நிலையை நாம் வாசிக்கலாம்.
இயேசு அங்கே ஆச்சரியமான ஒரு காரியத்தைச் செய்கிறார்:
"அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்." – மத்தேயு 14:19
இயேசு அப்பங்களைப் பிட்கும் முன்பே நன்றி செலுத்தினார். அற்புதம் நடப்பதற்கு முன்பே, தேவன் தேவையை சந்திப்பதற்கு முன்பதாகவே அவர் ஸ்தோத்திரித்தார்.
ஆண்டவர் அவர்களுடைய தேவையை சந்திப்பார் என்று அவர் தனது பிதாவை நம்பினார் — அவர் அப்படியே செய்தார். சீஷர்கள் உணவைப் பகிர்ந்தளித்தபோது, மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைகள் நிறைய இருந்தன. ஆரம்பத்தில் இருந்ததை விட மீதியானது அதிகமாக இருந்தது!
இருப்பினும் இந்த சம்பவத்திற்கு முன்பு, சீஷர்கள் தங்களிடம் இல்லாதவற்றின் மேலேயே கவனம் செலுத்தியிருந்தார்கள். அற்புதங்களைக் கண்ட வெற்றிகரமான ஒரு ஊழியப் பயணத்திலிருந்து அவர்கள் அப்போதுதான் திரும்பியிருந்த போதிலும், அவர்கள் தேவனுடைய வல்லமையை விரைவில் மறந்துவிட்டார்கள்; அந்தக் கூட்டத்திற்கு உணவளிக்க எவ்வளவு செலவாகும் என்று கவலைப்பட்டார்கள் (யோவான் 6:5-7).
புதிய சவால்களை நாம் எதிர்கொள்ளும்போது, தேவன் செய்த காரியங்களை மறந்துவிடுவது எளிது.
சாத்தியமற்றது என்று தோன்றும் எந்தச் சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்?
உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்துத் தேவைகளையும் சவால்களையும் பட்டியலிட இன்று சிறிது நேரம் ஒதுக்குங்கள்; நீங்கள் இன்னும் காணாத தேவனுடைய அற்புத பொழிவிற்காக அவருக்கு இப்போதே நன்றி செலுத்துங்கள்.
பிலிப்பியர் 4:19-20 வசனங்களைக் கொண்டு நான் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன்:
பரலோகப் பிதாவே, உமது மகிமையின் ஐசுவரியத்தின்படி கிறிஸ்து இயேசுவுக்குள் குறைவுகளையெல்லாம் நிறைவாக்குவதற்காக உமக்கு நன்றி. உமக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. இயேசுவின் நாமத்தில், ஆமென்.