உங்கள் உணவு டிபனில் என்ன இருக்கிறது?
இயேசு அனுபவித்த ஒரு குறிப்பிட்ட 24 மணிநேரத்தைப் பற்றிய நமது தொடரைத் தொடரும் இன்று, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொடுத்த அந்தச் சிறுவனின் காணிக்கையைப் பற்றி நாம் சிந்திக்கப்போகிறோம்.
நம் அனைவருக்கும் திட்டங்கள் உண்டு, ஆனால் யாக்கோபு 4:13-14 நமக்கு நினைவூட்டுகிறது:
"நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய்ச், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே."
இதன் பொருள் நாம் திட்டமிடக் கூடாது என்பதல்ல, மாறாக நமது திட்டங்களைவிட தேவனுடைய திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதேயாகும்.
அந்த அப்பங்களையும் மீன்களையும் வைத்திருந்த சிறுவனுக்கும் சில திட்டங்கள் இருந்திருக்கலாம், ஆனால் அவன் தேவனை நம்பவும் அவருக்குத் தன்னை அர்ப்பணிக்கவும் முடிவு செய்தான். அவன் இயேசுவிடம் ஏதோ ஒரு விசேஷமான காரியத்தைக் கண்டான். கேள்வியறிவைவிட விசுவாசத்தையே அவன் தேர்ந்தெடுத்தான். தேவனுடைய திட்டத்திலிருந்து அவன் பின்வாங்கவில்லை. எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்று நாமே முடிவு செய்வதன் மூலம், தேவன் நம் மூலமாகச் செய்யக்கூடிய காரியங்களை நாம் பெரும்பாலும் மட்டுப்படுத்திவிடுகிறோம்.
இயேசுவை நம்புவது என்பது ஒரு விசுவாச செயலாகும். நம் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறிய 'லஞ்ச் பாக்ஸ்' (tiffin) இருக்கிறது, அதைத் தன்னிடம் கொடுக்கும்படி இயேசு நம்மிடம் கேட்கிறார். நாம் அதை அவரிடம் ஒப்படைக்கும்போது, நாம் கற்பனை செய்வதற்கும் மேலாக அவரால் அதைப் பெருகச் செய்ய முடியும்.
இயேசு அந்த அப்பங்களையும் மீன்களையும் பெருகச் செய்தபோது, பன்னிரண்டு பெரிய கூடைகள் நிறைய மீதியாக இருந்தன!
இந்த அபரிமிதமான தருணம் எனக்கு இந்த வேதவசனத்தை நினைவூட்டுகிறது:
"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு..." – எபேசியர் 3:20-21
அந்த மக்கள் கூட்டத்திற்கு உணவளித்த அதே தேவன், உங்களுக்கு என்ன தேவை, எவ்வளவு தேவை என்பதைச் சரியாக அறிவார்! இன்று உங்களிடம் இருப்பதை அவருடைய பராமரிப்பில் ஒப்படைப்பதன் மூலம் அவரை நம்புங்கள்.
பரலோகப் பிதாவே, எனது சொந்த ஆதாரங்களைச் சார்ந்திருக்காமல் உமது ஆதாரங்களை நம்ப எனக்கு உதவி செய்யும். நீர் பெருகச் செய்வீர் என்பதை அறிந்து, என்னிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்ளத் தேவையான விசுவாசத்தை எனக்குத் தாரும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.