உங்களுடைய பெலிஸ்தியர் யார்?
நீங்கள் எப்போதாவது வேதாகமத்தை வாசித்து, “என்ன இது?!” என்று யோசித்ததுண்டா?
நான் அப்படி யோசித்திருக்கிறேன். குறிப்பாக பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளை வாசிக்கும்போது, அவ்வாறு யோசித்ததுண்டு. ஆனால் புதிய ஏற்பாட்டில், இயேசு தோன்றும் இடத்திலிருந்து, வேதாகமம் திடீரென்று மிகவும் எளிதாகவும், அதிக அர்த்தமுள்ளதாகவும் மாறுகிறது. இயேசுவோடு நம்மால் நம்மைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது.
ஆனால் அவர் பழைய ஏற்பாட்டிலும் கூட இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? பழைய ஏற்பாட்டின் பல கதைகள், பண்டிகைகள், ஆசாரங்கள் மற்றும் நிகழ்வுகள் இயேசுவுக்கு சாட்சியாக இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? பவுல் இவற்றை “நிழல்கள்” என்று அழைக்கிறார்:
"அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது." – கொலோசெயர் 2:17
இந்த மாதம் முழுவதும், ஒவ்வொரு நாளும் நாம் ஒரு குறிப்பிட்ட பழைய ஏற்பாட்டுப் பகுதியை மையமாகக் கொண்டு, அது எவ்வாறு நம்மை இயேசுவினிடத்திற்கு வழிநடத்துகிறது என்று பார்க்கப்போகிறோம். இந்த மாத இறுதியில், நீங்கள் ஏற்கனவே நம் இரட்சகர் மேல் வைத்திருக்கும் பிரமிப்பை விட இன்னும் அதிக பிரமிப்படைவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
பழைய ஏற்பாட்டில் இயேசுவைப்பற்றிய மிகத் தெளிவான முன்னடையாளம் தாவீது ஆவார். இயேசு ‘தாவீதின் குமாரன்’ என்று கூட அழைக்கப்படுகிறார் (மத்தேயு 1:1).
தாவீது கோலியாத்தை வென்றது, இயேசு சிலுவையில் பாவத்தின் மீது கொண்ட வெற்றியைப் பிரதிபலிக்கிறது.
இஸ்ரவேலரால் கோலியாத்தைக் கொல்ல முடிந்தால், பெலிஸ்தியர் அனைவரும் இஸ்ரவேலருக்கு அடிமைகளாவார்கள் என்பதே ஒப்பந்தம் (1 சாமுவேல் 17:8-9). ஆனால் பிசாசைப் போலவே கோலியாத்தும் ஒரு பொய்யனாக இருந்தான் (யோவான் 8:44). தாவீது கோலியாத்தைக் கொன்றபோதிலும், பெலிஸ்தியர்கள் ஓடிப்போனார்கள், இஸ்ரவேலின் இராணுவம் அவர்கள் ஒவ்வொருவரையும் பின்தொடர்ந்து சென்று கொல்ல வேண்டியிருந்தது (1 சாமுவேல் 17:51-52).
அதேபோல, இயேசு சிலுவையில் சத்துருவை வென்றிருந்தாலும், அவன் தன் தோல்வியை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை (இதுவரையில்), மற்றும் நாம் அனைவருமே சில நேரங்களில் ஆவிக்குரிய போராட்டங்களை எதிர்கொள்கிறோம்.
இன்று உங்களுக்கான சவால் என்னவென்றால், யுத்தம் ஏற்கனவே ஜெயிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிந்து, வெற்றிக் கூக்குரலிட்டு, உங்களுடைய “பெலிஸ்தியனை” துரத்திச் செல்லுங்கள்!