The Importance of the Messenger
கடந்த வருடம் நான் யோனா புத்தகத்தைச் சார்ந்த ஒரு தொடரை எழுதினேன், அதன் பிறகு அதை YouVersion Bible செயலியில் ஒரு வாசிப்புத் திட்டமாக பதிவேற்றியுள்ளேன். நம்முடைய வாசகர்களில் பலர் அந்தத் தொடரையும் திட்டத்தையும் மிகவும் விரும்பியுள்ளனர், நீங்கள் அதைத் தவறவிட்டிருந்தால், அதை ஒருமுறை வாசித்துப் பார்க்குமாறு நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
ஆனால் அந்தத் தொடரில் நான் குறிப்பிடாத ஒரு விஷயம் என்னவென்றால், யோனாவின் கதை இயேசுவையும் முன்னறிவிக்கிறது, என்பதே. எனவே, அதைத்தான் நான் இன்று உங்களுடன் ஆராய விரும்புகிறேன்.
மத்தேயு 12-இல், பரிசேயர்கள் இயேசுவிடம் ஒரு அடையாளத்தைக் கேட்பதை நாம் வாசிக்கிறோம். அதற்கு அவர், அவர்களுக்கு யோனாவின் அடையாளமே கொடுக்கப்படும் என்று பதிலளிக்கிறார்:
"யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்." – மத்தேயு 12:40
நினிவேயில் யோனாவின் ஊழியம் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை அளிக்கிறது. யோனாவின் ஒரே ஒரு தீர்க்கதரிசன வார்த்தையின் அடிப்படையில், ராஜா உட்பட ஒரு முழு நகரமும் உடனடியாக தேவனை விசுவாசித்து, மனந்திரும்பியது (யோனா 3:5-6).
ஒருவேளை அது, என்ன சொல்லப்பட்டது என்பதால் அல்லாமல், யார் அந்தச் செய்தியைக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பதால் இருந்திருக்கலாம்.
யோனா, இயேசுவைப் பிரதிபலிக்கும் நிழலாக இருக்கிறார்: அவர் கொல்லப்பட்டார் (குறைந்தபட்சம் மாலுமிகள் அதைத்தான் நம்பினார்கள்), அவர் மூன்று நாட்கள் கடலின் ஆழத்திற்குள் தூக்கி எறியப்பட்டார், மேலும் தேவனால் கைவிடப்பட்டார். ஆயினும்கூட, யோனா மீண்டும் உயிர் பிழைத்து வந்து, இரட்சிக்கும் தேவனைப் பற்றிய சாட்சியைக் கூறுகிறார் (யோனா 1:11-15). நினிவேயினர்கள் நம்பியது: இந்த மனிதன் நிச்சயம் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும், என்று. மேலும் தேவன் ஒரு மனிதனை கடலில் மரணத்திலிருந்து திரும்பக் கொண்டுவர முடியுமென்றால், ஒருவேளை நினிவேயைப் போன்ற பாவம் நிறைந்த ஒரு நகரத்திற்கும் அவர் இரக்கம் காட்டக்கூடும், என்று நம்பியிருக்கலாம்.
இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் யோனாவின் கதையை விட இன்னும் அதிக வல்லமையுள்ளது. இது மரணத்தின் மீதும் கூட அதிகாரம் கொண்டிருக்கும் ஒரு தேவனைப் பற்றி சாட்சி அளிக்கிறது. மூன்றாம் நாளில், இயேசு மீண்டும் உயிரோடு எழுந்தார். அவர் யார் என்பதற்கு… அவரே தேவனுடைய குமாரன் என்பதற்கு இது மறுக்க முடியாத ஒரு சான்றாகும்.
மனிதனாக வந்து மரணத்தை வென்ற தேவனாகிய இயேசுவை விட அதிக வல்லமையுள்ளவராகவும், நம்பகமானவராகவும், உண்மையுள்ளவராகவும் யாரிருக்க முடியும்? யாருமில்லை! அவருடைய செய்தி உண்மையானதும் வல்லமையுள்ளதுமாய் இருக்கிறது.