அதைச் செய்யும்படி நீங்கள் என்னிடம் கேட்க முடியாது!😱
தேவன் உங்களை எப்போதாவது உங்களுடைய வசதியான சூழ்நிலையை விட்டு வெளியேறும்படி சவாலுக்கு உட்படுத்தியிருக்கிறாரா? அவர் என்னிடம் நிச்சயமாக அதைச் செய்திருக்கிறார். ஒரு அந்நியரிடம் சென்று ஓர் ஊக்கமளிக்கும் வார்த்தையைப் பகிர்ந்து கொள்ளும்படி தேவன் என்னை உந்துவது அல்லது நான் வசதியாக உணர்ந்ததை விடப் பெரிய அளவில் ஒரு பண உதவியைச் செய்யும்படி உணர்த்துவது போன்ற காரியங்கள் அவை.
இருப்பினும், தேவன் என்னிடம் ஒருபோதும் கேட்காத ஒன்று, ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்பதுதான்.😮💨
ஆனால் தேவன், ஆபிரகாமைச் சரியாக அதைத்தான் செய்யும்படி கேட்டார், அதுவும் யாரோ ஒருவரை அல்ல, ஒரு அற்புதத்தின் மூலம் பிறந்தவனும், நீண்ட நாட்களாகக் காத்திருந்து பெற்றதுமான அவருடைய ஒரே குமாரனாகிய ஈசாக்கைக் கொலை செய்யும்படி தேவன் ஆபிரகாமிடம் கூறினார் (ஆதியாகமம் 22-இல் இந்தச் சரித்திரத்தை வாசியுங்கள்).
சிறுவர் வேதாகமங்களில், ஈசாக்கு ஒரு சிறு பையனாக, ஒன்றுமறியாமல் தன் தகப்பனைப் பின்தொடர்ந்து மலையின் மேல் செல்வது போலவும், பலிபீடத்தில் கட்டப்பட்டபோது பலமற்றவனாக இருந்தது போலவும் பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறான். ஆனால் இந்த நிகழ்வுகள் நடந்தபோது ஈசாக்குக்கு சுமார் 30 வயது இருந்திருக்கும் என்று விவிலிய அறிஞர்கள் மதிப்பிடுகிறார்கள். இயேசு நம்முடைய பாவங்களுக்காக ஜீவபலியாக சிலுவையில் மரித்தபோதும் இதே வயது வரம்பில் தான் இருந்தார்.
ஈசாக்கு தன் தகப்பனுடன் போராடி, தன்னை அவர் கட்டுவதைத் தடுக்கும் அளவுக்கு வயதும் பலமும் உள்ளவனாக இருந்தான். ஆனால் அதற்குப் பதிலாக, அவன் பலியிடப்படுவதற்கு ஆபிரகாமின் கட்டளையை மனப்பூர்வமாக ஏற்றுக் கீழ்படிந்தான். இயேசு தன் பிதாவின் விருப்பத்தின் பேரில் சிலுவையில் தன் ஜீவனை மனப்பூர்வமாகக் கொடுக்க முன்வந்ததைப் போலவே இதுவும் இருக்கிறது (யோவான் 10:17-18 மற்றும் யோவான் 18:11).
இந்தச் சரித்திரத்தின் நோக்கம், தேவன் நம்மை மனிதர்களையோ அல்லது நம்முடைய பிள்ளைகளையோ கொலை செய்யக் கோருவார் என்பது அல்ல, ஏனெனில் அவர் ஒருபோதும் நம்மை அப்படிச் செய்யக் கேட்க மாட்டார் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்!!
மாறாக, பழைய ஏற்பாட்டின் பல சரித்திரங்களைப் போலவே, இதுவும் இயேசுவைச் சுட்டிக்காட்டுகிறது.
ஈசாக்கு தன் தகப்பனை நோக்கி: “இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்டபோது, ஆபிரகாம்: “தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்” என்று பதிலளித்தான் (ஆதியாகமம் 22:7-8). சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு, யோவான் ஸ்நானகன் இயேசுவை முதல்முறையாகக் கண்டபோது, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” என்று உரக்கக் கூறினான் (யோவான் 1:29)
இயேசு உங்களுக்காக உன்னதமான பலியானார். மனப்பூர்வமாகவும், முழு இருதயத்தோடும் மற்றும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டபடியும் அவர் இதைச் செய்தார்.
நீங்கள் கேட்டவற்றிலேயே மிகவும் தெய்வீகமான காரியம் இதுவல்லவா?