நான் யாராக ஆவேன் என்று ஒருவரும் அறிந்திருக்க முடியாது!
சில நேரங்களில் நான் என் வாழ்க்கையைப் பார்க்கும்போது, அது அமைந்த விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது—மும்பையின் மலாட் (Malad) பகுதியின் ஒரு சிறிய மூலையிலிருந்து வந்த ஒரு சாதாரணமான சிறுவனை, உலகம் முழுவதும் பயணித்து ஆராதனைப் பாடல்களை எழுதவும் இசையமைக்கவும் தேவன் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்று என்னி வியக்கிறேன்.
நான் என்னவாக மாறுவேன் என்று யாரும் கணித்திருக்க முடியாது, குறிப்பாக தலைமுறைகளுக்கு முன்பிருந்த என் முன்னோர்கள் அதைச் சற்றும் நினைத்திருக்க மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ஒரு சாதாரண மனிதன்தான்.
ஆனால் தேவகுமாரனாகிய இயேசுவின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, நாம் ஒரு குறிப்பிடத்தக்க காரியத்தைக் காண்கிறோம்: அவருடைய பிறப்பு, உலக வாழ்க்கை மற்றும் சிலுவை மரணம் ஆகியவை 400-க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்களில் முன்கூட்டியே உரைக்கப்பட்டிருந்தன—அவர் அவை எல்லாவற்றையும் நிறைவேற்றினார். தேவன் நாம் கற்பனை செய்வதை விடப் பெரியவர் என்பதற்கு இது ஒரு வல்லமைவாய்ந்த நினைவூட்டலாகும்.
இவற்றில் சில தீர்க்கதரிசனங்கள் அவர் பிறக்கும் இடம் போன்ற நம்ப முடியாத அளவு குறிப்பிட்ட விவரங்களைக் கொண்டவை. மற்றவைகள் ஒரு பிரதிபலிப்பைப் போன்றவை—அவை இயேசுவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாக இருக்கின்றன. இந்த வாரம், நாம் அந்த பிரதிபலிப்புகளுள் சிலவற்றை ஒன்றாக ஆராயப் போகிறோம்.
இயேசுவின் வம்சாவழி வந்தவர்களில் ஒருவரான யாக்கோபு, ஒரு நாள் ஒரு சொப்பனம் கண்டார்:
“அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.” – ஆதியாகமம் 28:12
தன் சொப்பனம் இயேசுவைப் பற்றியது என்று யாக்கோபு அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் யோவான் 1:51-இல், இயேசு வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான ஏணி தாமே என்று நத்தானியேலுக்கு விளக்குவதை நாம் வாசிக்கிறோம்.
"பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." – யோவான் 1:51
இயேசுவே பிதாவினிடத்திற்குச் செல்லும் வழியாயிருக்கிறார்; அவரே வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள இணைப்பாக இருக்கிறார்.
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முன்பு, வானம் திறக்கப்படுவதைக் குறித்து வேதாகமத்தில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது (உதாரணத்திற்கு, யாக்கோபின் சொப்பனம், எசேக்கியேலின் தரிசனம் (எசேக்கியேல் 1:1) மற்றும் இயேசுவின் ஞானஸ்நானம் (மத்தேயு 3:16).
ஆனால் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, வானம் திறக்கப்படுவதைக் குறித்து வேதாகமம் பேசவில்லை, மாறாகத் திறந்திருக்கிற வானத்தைக் குறித்தே நாம் வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 7:56, அப்போஸ்தலர் 10:11). அதாவது இயேசு மரணத்தை வென்றதிலிருந்து, வானம் நிரந்தரமாகத் திறந்திருக்கிறது!
யாக்கோபு தன் சொப்பனத்தில் கண்டது போலவே, இயேசு திறந்திருக்கும் வானத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் ஏணியாக இருக்கிறார்.