மிகச்சிறந்த நண்பன்!
பழைய ஏற்பாட்டையும், அதில் இயேசுவைப் பிரதிபலிக்கும் மனிதர்களையும் பார்க்கும்போது, தாவீது அநேகமாக மிகவும் வெளிப்படையான ஒருவராகத் தெரிவார். இஸ்ரவேல் அதுவரை கண்டிராத மிகச்சிறந்த ராஜாவாக அவர் இருந்தார், அதே வேளையில் இயேசுவோ உன்னதமான ராஜாதி ராஜாவாக இருக்கிறார். உண்மையில், இயேசு பலமுறை தாவீதின் குமாரன் என்றே அழைக்கப்படுகிறார்.
ஆனால் தாவீதின் சரித்திரத்தில் இயேசுவை வெளிப்படுத்தும் மற்றொரு நபரும் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது தாவீதின் சிறந்த நண்பனான யோனத்தான்.
சவுல் ராஜாவின் குமாரனாகிய அவன், தாவீதிடம் எவ்வளவு நெருக்கமானான் என்றால், அவன் அவனோடு ஒரு உடன்படிக்கை செய்து, அவன் உயிரைப்போல தாவீதை சிநேகித்தான். யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது. (1 சாம். 18:1-4).
இது கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமான ஒரு நண்பனைப் போல இல்லையா? உங்களை அவ்வாறே, இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக நேசிக்கும் ஒரு நண்பர் உங்களுக்கு இருக்கிறார்: அவர்தான் இயேசு!
இயேசு நம்மோடு ஒரு உடன்படிக்கையைச் செய்துள்ளார் (லூக். 22:20), அது யோனத்தானின் உடன்படிக்கையை விடவும் பெரியது, ஏனெனில் அவர் அதைச் சிலுவையில் முத்திரையிட்டார்.
அதுமட்டுமன்றி, அது இத்தோடு முடிந்துவிடவில்லை.
யோனத்தான் தன் மேலங்கியையும் வஸ்திரங்களையும் தாவீதுக்குக் கொடுத்தான் (1 சாம். 18:4), ஆனால் வேதாகமமோ, இயேசு நமக்கு இரட்சிப்பின் வஸ்திரங்களையும் நீதியின் சால்வையையும் உடுத்துகிறார் என்று கூறுகிறது (ஏசா. 61:10). யோனத்தான் தன் ஆயுதங்களையும் கூட தாவீதுக்குக் கொடுத்தான், அதேபோல நம் நண்பராகிய இயேசு நமக்கு தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தந்திருக்கிறார் (எபே. 6:11-18).
ராஜாவின் குமாரனாகிய யோனத்தானை சந்தித்தபோது தாவீது ஒரு சாதாரண மனிதனாகவே இருந்தான், இருப்பினும் யோனத்தான் அவனை நேசித்தான். தேவகுமாரனும் ராஜாதி ராஜாவுமாகிய இயேசு, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களை நேசிப்பதும் இதுபோன்றதாகவே இருக்கிறது.
யோனத்தான் தாவீதிடம், “உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன்” என்று வாக்குக் கொடுக்கிறான் (1 சாம். 20:4), இயேசுவும், “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக...” என்று சொன்னபோது இதே போன்ற ஒரு வாக்கையே நமக்கும் அருளினார். – யோவான் 15:16.
இறுதியாக, யோனத்தான் தன் தகப்பனுடைய சிங்காசனத்திற்குப் பின்வாரிசாக இருந்தான். இருப்பினும், குறிப்பிடத்தக்க வகையில், தனக்கு பதிலாக தாவீதுதான் ராஜாவாவான் என்பதை யோனத்தான் உணர்ந்திருந்தான் (1 சாம். 23:17). தாவீது சிங்காசனத்தில் அமருவதற்காக, யோனத்தான் தன் சொந்த உரிமையையே விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. இது நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்ட ஒரு விஷயமாக தோன்றுகிறதா?
நம்மை தேவனோடு ஒப்புரவாக்குவதற்காகப் பிதாவோடிருந்த தன் அந்தஸ்தையே விட்டுக்கொடுத்து வந்த இயேசுவை முன்கூட்டியே வெளிப்படுத்தும் மற்றொரு பிரதிபலிப்பு இதுவாகும் (பிலிப். 2:6-8).
இயேசு உங்களுடைய மிகச்சிறந்த, நெருக்கமான மற்றும் அன்பான நண்பராக இருக்க விரும்புகிறார். தேவனாயிருக்கிற இயேசுவை ஒரு தனிப்பட்ட நண்பராக ஏற்றுக்கொள்வது உங்களுக்குக் கடினமாக இருந்தால், யோனத்தானைப் போன்ற ஒரு நண்பனை நினைத்துப் பாருங்கள், மேலும் இயேசுவும் உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு நண்பராக இருக்க அனுமதி அளியுங்கள்.