ஆச்சரியம்!! அவர் இறக்கவில்லை😮
ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘லயன்’ என்ற ஒரு திரைப்படம் உள்ளது. அதில் தேவ் பட்டேல், இந்தியாவில் உள்ள தனது சொந்த குடும்பத்தைத் தேடும் சாரூ என்ற 25 வயது ஆஸ்திரேலியராக நடித்துள்ளார். ஒரு நெரிசலான இரயில் நிலையத்தில் தனது இந்திய குடும்பத்தினரிடமிருந்து பிரிந்த பிறகு, தனது 5வது வயதில் இந்தியாவில் இருந்து தத்தெடுக்கப்பட்டார். அவர் இறுதியாக அவர்களைக் கண்டுபிடிக்கும் போது, அவர்கள் அளவற்ற மகிழ்ச்சியடைகிறார்கள், ஏனென்றால் இத்தனை வருடங்களாக அவர் இறந்துவிட்டார் என்றே அவர்கள் நினைத்திருந்தார்கள்.
யோசேப்பு உயிருடன் இருக்கிறார் என்பதை அறிந்தபோது அவருடைய குடும்பத்தினரும் இப்படித்தான் உணர்ந்திருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. பல வருடங்களாக, அவர் இறந்துவிட்டார் என்ற யூகத்தின் கீழேயே அவர்கள் வாழ்ந்தார்கள், ஆனால் உண்மை அதற்கு முற்றிலும் மாறாக இருந்தது! உண்மையில், அவர் பார்வோனின் வலது கரமாக இருந்தார் (ஆதியாகமம் 37-இல் இந்த கதையை வாசியுங்கள்).
எகிப்தில் ஒரு அதிபராக யோசேப்புக்கு இருந்த தனித்துவமான பதவியின் காரணமாகவும், தானியங்களை சேமித்து வைத்துப் பின்னர் விநியோகிப்பதற்கான அவருடைய சிறந்த மீட்புத் திட்டத்தினாலும், அவர் தனது சொந்த குடும்பத்தை மட்டுமல்லாமல், அவர்களைச் சுற்றியிருந்த அனைத்து தேசங்களையும் பசியினின்று காப்பாற்ற முடிந்தது.
சாரூ மற்றும் யோசேப்பின் குடும்பத்தினர் அவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள் என்று நம்பியது போலவே, இன்றைய உலகிலும், பல மக்கள் இயேசு இறந்துவிட்டார் என்று நம்புகிறார்கள். அவர் ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து, பின்னர் இறந்துபோன ஒரு மதத் தலைவர் மட்டுமே என்று நினைக்கிறார்கள்.
உண்மை அதற்கு முற்றிலும் மாறானது… அவர் நிச்சயமாகவே உயிருடன் இருக்கிறார்!
“மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை.” – ரோமர் 6:9
யோசேப்பைப் போலவே, இயேசுவும் தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதால் (எபிரெயர் 1:3), நம்மை இரட்சிப்பதற்கு ஒரு தனித்துவமான நிலையில் இருக்கிறார்! அவருடைய சிறந்த மீட்புத் திட்டம் தானியக் களஞ்சியங்களை உள்ளடக்கியதாக இல்லை, மாறாக சிலுவையின் மரணத்தை உள்ளடக்கியதாக இருந்தது.
இந்த அற்புதமான செய்தியை மக்களுடன் பகிர்ந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்கும் எனக்கும் உள்ளது: இயேசு இறக்கவில்லை, அவர் உயிருடன் இருக்கிறார், மேலும் அவரால் உங்களை இரட்சிக்க முடியும் (1 கொரிந்தியர் 15:1-4)!