எல்லா சூழ்நிலைகளும் உங்களுக்கு எதிராக இருக்கும்போது
இந்த வாரம், நாம் எஸ்தரின் புத்தகத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள இருக்கிறோம். எஸ்தரின் வாழ்க்கை வெளியில் இருந்து பார்க்கத் தெரிந்ததைக் காட்டிலும் அவ்வளவு கவர்ச்சியானதாகவோ அல்லது ஒரு தேவதைக் கதையைப் போலவோ இருக்கவில்லை என்பதை நாம் நேற்றே பார்த்தோம். அதை விரிவாகப் பகுப்பாய்ந்து, எஸ்தர் மேற்கொள்ள வேண்டியிருந்த அனைத்து காரியங்களையும் நாம் உற்று நோக்குவோம்.
அவள் நாடுகடத்தப்பட்டாள்
எஸ்தரின் குடும்பத்தினர் எருசலேமில் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தார்கள் (எஸ்தர் 2:5-6). நாடுகடத்தப்படுவது என்பது எல்லாவற்றையும் பின்னே விட்டுவிட்டு, உங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒரு அறியப்படாத அந்நிய தேசத்திற்கு வலுக்கட்டாயமாகக் கொண்டுசெல்லப்படுவதைக் குறிக்கிறது; அங்கே நீங்கள் ஒரு திக்கற்றவரைப் போல வாழ்ந்து, எல்லாவற்றையும் மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும்.
அவள் அனாதையாக்கப்பட்டாள்
வேதவசனங்களின்படி, எஸ்தருக்குப் பெற்றோர் இருக்கவில்லை. அவள் தன் தகப்பனையும் தாயையும் இழந்திருந்தாள், மேலும் அவளுடைய மூத்த உறவினரான மொர்தெகாயால் வளர்க்கப்பட்டாள் (எஸ்தர் 2:7).
அவள் கடத்தப்பட்டாள்.
ஒரு புதிய ராஜஸ்திரீயைத் தேடும் முயற்சியில், பெர்சிய ராஜாவான அகாஸ்வேரு, தன் ராஜ்யத்திலுள்ள மிக அழகான கன்னிகைகளையெல்லாம் ஒன்றுசேர்த்தான்; அவர்களோடு ஒவ்வொருவராகச் சயனித்து, தனக்கு வேண்டியவளைத் தெரிந்துகொள்வதற்காக எஸ்தரும் அவ்வாறு சேர்க்கப்பட்டாள் (எஸ்தர் 2:1-4). வேதப்பகுதியின் மொழியிலிருந்தும், கலாச்சாரத்தைப் பற்றிய நம்முடைய அறிவிலிருந்தும், இந்த விஷயத்தில் எஸ்தருக்கு எந்த ஒரு சுயமுடிவும் இருக்கவில்லை என்பதை நாம் உறுதியாகக் கூற முடியும். அவள் இளைஞியாகவும், அழகானவளாகவும் இருந்தாள், அவள் கொண்டுசெல்லப்பட்டாள்.
அவள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டாள்.
இந்தப் பகுதி மக்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் என்ன நடந்தது என்பதைப் பற்றி வேதவசனங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன. பெரும்பாலும் பதின்ம வயதின் துவக்கத்தில் இருந்த அந்தப் பெண்கள், ஒவ்வொருவராக ராஜாவின் படுக்கையறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். மறுநாள் காலையில், அவர்கள் மற்ற கன்னிகளிடத்திற்குத் திரும்பாமல், அதற்குப் பதிலாக ராஜாவின் மறுமனையாட்டிகள் தங்கும் அந்தப்புரத்திற்கு அனுப்பப்பட்டார்கள் (எஸ்தர் 2:14).
பெற்றோர், சுதந்திரம், கற்பு என எல்லாவற்றையும் இழந்து நின்ற ஒரு பெண்ணைத் தேவன் தெரிந்துகொண்டு, அவளை ஒரு அதிகாரமிக்க பதவியில் அமர்த்தினார். பாலினம், கலாச்சாரம் மற்றும் சூழ்நிலை காரணமாக, எவராலும் கவனிக்கப்படாமலும் செல்வாக்கற்றவளுமாக இருந்த ஒருத்தியை, தேவன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த, வலிமைமிக்க நாயகியாக மாற்றினார்.
தேவன் எஸ்தரைப் பயன்படுத்த முடிந்தது என்றால், அவர் உங்களையும் என்னையும் நிச்சயமாகப் பயன்படுத்த முடியும்!