அது ஒரு கடினமான காரியம்!
ஒரு கடினமான மற்றும் ஆபத்தான காரியத்தைப் பார்த்துவிட்டு, அதைச் செய்வதற்கான தைரியத்தை எங்கே கண்டடைவது என்று நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா?
தன் ஜனங்களை இரட்சிப்பதற்காகத் தன் ஜீவனையும் பணையம் வைக்க வேண்டும் என்று எஸ்தர் ராணியின் பெரியப்பாவின் குமாரனாகிய மொர்தெகாய் அவளிடம் சொன்னபோது, அவள் என்ன உணர்ந்திருப்பாள் என்பதைப் புரிந்துகொள்ள அது உங்களுக்கு ஒரு சிறிய அளவில் உதவக்கூடும் (எஸ்தர் 4:8-16).
எஸ்தர் ராணிக்கு ஒரு தேர்வு இருந்தது. தங்கள் ஜனங்கள் எதிர்கொண்டிருந்த பெரிய ஆபத்தைக் குறித்து மொர்தெகாய் அவளுக்குச் செய்தி அனுப்பினபோது, அவள் தன்னை மாத்திரம் காப்பாற்றிக்கொள்ள எளிதாக முயன்றிருக்கலாம். அவள் மௌனமாக இருந்திருக்கலாம், எல்லாம் நன்மையாக முடியும் என்று சும்மா நம்பியிருக்கலாம் அல்லது வேறு பக்கம் திரும்பியிருக்கலாம்.
ஆனால், அவளுடைய பதவியின் மூலமாக தேவன் அவளுக்கு ஒரு பெரிய நோக்கத்தைத் தந்திருக்கிறார் என்பதை அவளும் மொர்தெகாயும் அறிந்திருந்தார்கள். அவள் ஞானமுள்ளவளாய் இருந்தாள்; ஒரு திட்டத்தைத் தீட்டினாள், பயத்திலும் கவலையிலும் முடங்கிப்போய்விடவில்லை. அவள் உபவாசித்து ஜெபித்தாள், தன் ஜனங்களையும் அவ்வாறே செய்யக் கேட்டுக்கொண்டாள். தன் ஜீவன் போனாலும் பரவாயில்லை என்று துணிந்து, தேவனுடைய வழிநடத்துதலைப் பின்பற்றி, தன் ஜனங்களின் ஜீவனைக் காப்பாற்ற அவள் கிரியை செய்ய ஆயத்தமானாள்.
அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்குத் திரும்ப அனுப்பின மறுஉத்தரவு:
“நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.” – எஸ்தர் 4:15-16
ஆனால், எஸ்தரின் இந்தச் செயல்கள் ஆபத்து இல்லாதவை அல்ல. அழைக்கப்படாமல் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பதற்கான தண்டனை மரண தண்டனையாக இருந்தது.
நம்முடைய தற்போதைய சூழ்நிலைகள் எஸ்தர் எதிர்கொண்டவற்றிலிருந்து மாறுபட்டதாகக் காணப்பட்டாலும், நமக்கு சௌகரியமாக இருக்கும் இடத்தை விட்டுவிட்டு, நம்மையே நாம் ஆபத்துக்குள்ளாக்கும் காரியங்களைச் செய்ய தேவன் நம்மையும் அழைக்கக்கூடும்.
அவருடைய அழைப்பிற்குக் கீழ்ப்படிவது மிக முக்கியமானது. அது ஒரு முழுத் தலைமுறையையே மாற்றுவதற்கான வல்லமையைக் கொண்டிருக்கலாம். நாம் செய்யும் செயல்களும், அவருடைய சத்தத்திற்கு நாம் காட்டும் உண்மையுள்ள கீழ்ப்படிதலும், நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் வல்லமையாய் கிரியை செய்கின்றன என்பதை அறிந்திருங்கள்.