உங்களை அடையாளப்படுத்துவது எது?
உங்களைத் தனித்துவமாக அடையாளப்படுத்தும் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருக்கிறதா? மக்கள் உங்களை எதன் மூலம் அறிந்து வைத்திருக்கிறார்களோ அப்படிப்பட்ட ஒரு விஷயம். ஒருவேளை அது தனித்துத் தெரியக்கூடிய உங்கள் தோற்றம் சார்ந்த ஒன்றா? அல்லது மற்றவர்கள் உங்களை அறிந்துவைத்திருக்கும்படியான ஏதேனும் ஒரு குணாதிசயமா?
யோவான் 9ல் ஒரு குருடனின் கதையை நாம் வாசிக்கிறோம். அவன் அவ்வாறு பிற்ந்தான் என்பதைத் தவிர, அவனுடைய பெயரோ அல்லது அவனைப் பற்றிய வேறு விவரங்களோ குறிப்பிடப்படவில்லை. அவனுடைய பார்வையின்மை அவனை அடையாளப்படுத்தியதுடன், “இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ?” (வசனம் 2) என்று ஜனங்கள் யோசிக்கும்படியும் செய்தது.
ஆனால் இயேசுவோ, பழி சுமத்தும் போக்கை நிராகரிக்கிறார். அதற்குப் பதிலாக, அவர் மிகவும் ஆழமான ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்:
‘அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்..’ – யோவான் 9:3
சில சமயங்களில், நம்மை வரையறுப்பதாக நாம் நினைக்கும் விஷயங்களான நமது போராட்டங்கள், வலிகள், வரம்புகள் போன்றவையே, பெரிய விஷயங்கள் நிகழ்வதற்கான களங்களாக அமைகின்றன. ஒரு சாபம் போலவோ அல்லது ஒருவரின் வாழ்வில் மாற்ற முடியாத ஒரு பகுதி போலவோ தோன்றுவது, ஒரு அற்புதத்திற்கான களமாக மாறக்கூடும்.
அதன்பின், இயேசு எதிர்பாராத ஒன்றைச் செய்கிறார். இயேசு ஒரே ஒரு வார்த்தையால் அந்த மனிதனைக் குணப்படுத்தியிருக்க முடியும். ஒரு எளிய “குணமாவாயாக!” அவ்வளவுதான்: உடனே பார்வை பெற்றிருப்பான், அல்லவா?
மாறாக, “அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசினார்...” (யோவான் 9:6). அது பார்ப்பதற்கு அசௌகரியமாகவும், மிகவும் விசித்திரமானதாகவும் இருந்தது. ஒரு அற்புதம் இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனாலும், இயேசு அந்த மனிதனைத் தம்மை நம்பும்படி கேட்கிறார். மேலும், சீலோவாம் குளத்திற்குச் சென்று கழுவிக்கொள்ளும்படியும் அவனிடம் கூறுகிறார்.
அந்த மனிதன், விசித்திரமான செயல்பாடுகள் இருந்தபோதிலும், கீழ்ப்படிகிறான். அவன் இயேசுவிடம் கேள்வி கேட்டிருக்கலாம். அவன் சந்தேகித்திருக்கலாம். இயேசுவுக்குக் கீழ்ப்படியாமல், தன் கண்களில் சேறு படிந்திருக்க, தானாகவே குணமாகும் என்று காத்திருந்து, இருந்த இடத்திலேயே அவன் இருந்திருக்கலாம். ஆனால் அவன் செவிகொடுக்கிறான். அவன் தன் கண்களிலிருந்து சேற்றைக் கழுவியபோது, அவன் பார்வை அடைகிறான். தன் வாழ்வில் முதன்முறையாக, அவனால் உலகை அதன் முழு வண்ணத்திலும் அழகிலும் காண முடிந்தது.
நாம் நமது மிகப்பெரிய பலவீனமாகக் கருதுவது, நாம் மாபெரும் மாற்றத்தைப் பெறும் இடமாக அமையலாம்.
காரியங்கள் விசித்திரமான திருப்பத்தை எடுப்பது போல் தோன்றும்போதும், இயேசுவிடம் ஒரு திட்டம் இருக்கிறது என்று அவரை நம்புங்கள், மேலும் அவர் உங்களைச் செயல்படத் தூண்டும்போது அவருக்குக் கீழ்ப்படியுங்கள்.
இந்த உரை “அசைவாடும் அற்புதங்கள்” என்ற மின்-புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த கதையைப்பற்றி நீங்கள் இன்னும் அதிகமாக சிந்திக்க விரும்பினால், இந்த மின்-புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்யவும். இந்த அற்புதத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கு சிறந்த பாடங்களையும், சிந்திப்பதற்கான தூண்டக்கூடிய கேள்விகளையும் இது கொண்டுள்ளது. நான் இதை மிகவும் பரிந்துரைக்கிறேன்!