நீ ஏன் அதைப்பற்றி ஏதாவது செய்யக்கூடாது?
நாம் தேவனிடம் எதையாவது கேட்கும்போது அவருடைய பிரியமான பதில்களில் ஒன்று, "நீயே அதைச் செய்!" என்பதாக இருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
தரமான இந்தி ஆராதனை இசை இல்லாததைக்குறித்து நான் தேவனிடம் புலம்பிக்கொண்டிருந்தபோது, பல வருடங்களுக்கு முன்பு எனக்கு அந்தப் பதில் கிடைத்தது. "அப்படியானால் நீ ஏன் அதைப்பற்றி ஏதாவது செய்யக்கூடாது?" என்று அவருடைய குரல் சொல்வதை நான் கேட்டேன்.
என்னுடைய முதல் எண்ணம், "அது சாத்தியமே இல்லை!" என்பதாக இருந்தது. அந்த நேரத்தில், நான் ஒரு இசைக் கலைஞனாக மட்டுமே இருந்தேன், ஆராதனைத் தலைவராக இல்லை. மேலும் இந்தி என் தாய்மொழியாகவும் இருக்கவில்லை. ஆனால் நான் கீழ்ப்படிந்தேன், அது Yeshua Ministries தொடங்குவதற்குக் வழிவகுத்தது.
இயேசுவின் சீஷர்களும் ஒரு பிரச்சினையோடு அவரை அணுகியபோது இதேபோன்ற ஒன்றை அனுபவித்தார்கள். இயேசு ஒரு பெரிய கூட்டத்திற்கு நீண்ட நேரமாக ஊழியஞ்செய்துகொண்டிருந்தார், ஆனால் பொழுது போய்க்கொண்டிருந்தது, சீஷர்கள் கவலைப்படத் தொடங்கினார்கள்:
‘இது வனாந்தரமான இடம், வெகுநேரமுமாயிற்று; புசிக்கிறதிற்கும் இவர்களிடத்திலே ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.’ – மாற்கு 6:35-37
ஐயாயிரம் ஆண்கள், அதோடு பெண்களும் குழந்தைகளும் என அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்பதை அறிந்ததும் அவர்களின் கண்கள் விரிந்தன. அவர்களிடம் இருந்த உணவுப்பொருட்களை கணக்கிட்டனர், அவர்கள் கைகளில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே இருந்தன. அது போதவே போதாது. ஆனால் இயேசு, தங்களிடம் உள்ளதைக் கொண்டுவருமாறு அவர்களிடம் கேட்டார்.
ஆகவே, அற்பமாகத் தோன்றிய அந்தச் சிறிய பொருட்களை அவர்கள் அளித்தனர். இயேசு அதைத் தம் கைகளில் எடுத்து, வானத்தை நோக்கி உயர்த்தி, ஆசீர்வதித்து, அதைப் பிட்கத் தொடங்கினார். துண்டு துண்டாக அதன் பகுதிகளை அவர்களுடைய கைகளில் வைத்தார்.
ஒரு அற்புதம் நிகழ்ந்தது. இயேசுவின் உதவியுடன், சீஷர்கள் 5,000-க்கும் அதிகமான கூட்டத்திற்கு உணவளித்தார்கள்.
நான் யெஷூவா ஊழியங்களைத் தொடங்கியபோது, என்னிடம் இருந்த சிறிய காரியங்களையே தேவனுக்குக் கொடுத்தேன்: உள்ளூர் சபையின் மீதான என் ஆர்வம், என் இசைத் திறமைகள் மற்றும் அவருக்கு ஊழியம் செய்வதற்கான ஒரு வாஞ்சை. தேவன் அதைப் பெருகப்பண்ணி, ஒரு சர்வதேச இசை ஊழியமாக மாற்றினார்.
சமீபகாலமாக என்ன கேள்விகள், பிரச்சினைகள் அல்லது வாஞ்சைகளை நீங்கள் தேவனுக்கு முன்பாகக் கொண்டுவந்திருக்கிறீர்கள்? ஒருவேளை அவருடைய பதில், "நீயே அதைப்பற்றி ஏதாவது செய்!" என்பதாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவருக்குக் கொடுப்பதற்கு உங்களிடம் உள்ள ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் எவை?
இந்த உரை “அசைவாடும் அற்புதங்கள்” என்ற மின்-புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த கதையைப்பற்றி நீங்கள் இன்னும் அதிகமாக சிந்திக்க விரும்பினால், இந்த மின்-புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்யவும். இந்த அற்புதத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கு சிறந்த பாடங்களையும், சிந்திப்பதற்கான தூண்டக்கூடிய கேள்விகளையும் இது கொண்டுள்ளது. நான் இதை மிகவும் பரிந்துரைக்கிறேன்!