என்னிடத்திலுள்ளதை உம்மிடம் கொடுக்கிறேன்
நான் கேம்ரனிடம் எதையாவது கேட்கும்போதெல்லாம், நான் கேட்டதை மட்டும் நான் பெறுவதில்லை; அவர் வழக்கமாக நான் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே செய்வார். உதாரணத்திற்கு, வெளியிலிருந்து எனக்கு ஒரு டோனட் (doughnut) வாங்கி வரும்படி நான் அவரிடம் கேட்டால், அவர் ஒரு முழு பெட்டியுடனேயே வீட்டிற்கு வருவார் என்று நான் எதிர்பார்க்கலாம், எனக்கு பிடித்ததை தேர்ந்தெடுப்பதற்கு. 🥰
அப்போஸ்தல நடபடிகள் 3-இல், தான் எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பெற்ற ஒரு மனிதனை நாம் சந்திக்கிறோம். அவன் தன் வாழ்நாள் முழுவதும் முடக்குவாதமுள்ளவனாக இருந்தான். பிச்சை எடுப்பதிற்காக நாளுக்கு நாள் அவன் தேவாலயத்தின் வாசலில் வைக்கப்பட்டான். அவனுடைய எதிர்பார்ப்பு சிறியது: உயிர் பிழைப்பதற்குத் தேவையான ஒரு காசு.
அப்போது பேதுருவும் யோவானும் அவ்வழியே கடந்து செல்கிறார்கள். அந்த மனிதன் அவர்களைப் பார்க்கும்போது, பேதுரு எதிர்பாராத ஒன்றைச் சொல்கிறார்: “அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட!” (வசனம் 6).
இதையடுத்து நடந்தது ஒரு அற்புதம். அந்த மனிதன் குதித்தெழுந்து, நடந்து, தேவனைத் துதிக்கிறான். அவன் நம்பத் துணியாத ஒன்று நிஜமாகிறது.
எல்லாரும் பிரமிப்படைகிறார்கள், ஆனால் பேதுரு உடனடியாக தன் கவனத்தை திருப்புகிறார். இது தங்களது சுயவல்லமையினாலோ அல்லது பக்தியினாலோ நடக்கவில்லை என்று அவர் கூறுகிறார். இது இயேசுவினால் நடந்தது. சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கர்த்தரே குணமாக்குகிறவர், என்றார்.
இயேசுவின் மரணத்தில் தங்களுடைய பங்கைக் குறித்தும் — மற்றும் தேவனுடைய கிருபையைக் குறித்தும், தன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களை நேர்மையாக எதிர்கொள்ள பேதுரு இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். “கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.” என்று அவர் கூறினார் (வசனங்கள் 19-20).
இயேசு செய்த காரியம் இங்கு பிரதிபலிப்பதை நாம் காண்கிறோம்: நம்முடைய பலவீனங்களையும் குற்ற உணர்ச்சியையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுடன், புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பிற்கான கதவையும் திறப்பதுமாகும்.
நாம் சில நேரங்களில் அந்த முடக்குவாதமுள்ள மனிதனைப் போல இருக்கிறோம். தேவன் ஆழமான மறுசீரமைப்பைக் கொண்டுவர விரும்பும் போது, நாம் சிறிய தீர்வுகளையோ அல்லது தற்காலிக வழிகளையோ கேட்கிறோம். இயேசு நம்மை ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி உயர்த்த விரும்பும் போது, நாம் தற்காலிகமான நிவாரணத்தில் கவனம் செலுத்துகிறோம்.
தேவன் முழுமையான புதுப்பித்தலைத் தர விரும்பும் இடத்தில், நீங்கள் ஒரு “காசை” மட்டும் எதிர்பார்க்கும் விஷயம் அல்லது சூழ்நிலை எது?