முற்றிலும் மாற்றமடைவது
உங்கள் வாழ்க்கையில் நடந்த மிக விசித்திரமான நிகழ்வு எது? அல்லது நடந்த மிகப்பெரிய மாற்றம் எது? நான் ஒரு சாதாரண போதகரின் மகனாக இருந்து, மிகவும் அறியப்பட்ட ஒரு ஆராதனைத் தலைவராக மாறினேன்.
ஆனால் சவுலின் வாழ்க்கையில்—அல்லது பவுலின் வாழ்க்கையில் என்று சொல்லவேண்டுமா?—நடந்த மாற்றங்களோடு ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை.
சவுல் ஒரு பிடிவாதமும் இரக்கமற்ற குணமும் கொண்ட துன்புறுத்தும் மனிதனாக இருந்தார். சில கடிதங்களைத் தன் பையில் வைத்துக்கொண்டு, “இந்த மார்க்கத்தாரைக்” கைதுசெய்வதற்காக அவர் தமஸ்குவிற்குப் பயணிக்கிறார். தான் தேவனுக்கு ஊழியஞ்செய்வதாகவே அவர் நம்புகிறார். அவருடைய வைராக்கியம் உண்மையானது, ஆனால் அவருடைய திசை தவறானது.
பின்னர் வெளிச்சம் ஊடுருவுகிறது. வானத்திலிருந்து வந்த ஒரு வெளிச்சம் அவரைத் தரையில் தள்ளுகிறது. “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்…?” (அப்போஸ்தலர் 9:4).
இது ஒரு சந்திப்பு மட்டுமல்ல, ஒரு வெளிப்பாடு. இயேசு ஜீவிக்கிறார்! அவருடைய திருச்சபையைத் தொடுகிற எவனும், அவரையே தொடுகிறான். சவுல் பார்வையற்றவராகிறார். மற்றவர்களை துன்புறுத்தும் பலமுள்ள மனிதனாக இருந்த அவர் இப்போது மற்றவர்களைச் சார்ந்திருப்பவராக மாறுகிறார். மூன்று நாட்கள், அவர் இருளில் காத்திருக்கிறார்.
நகரத்தின் மறுபக்கத்தில், அனனியா என்பவர், சவுலிடம் செல்லுமாறு பணிக்கப்படுகிறார். ஆனால் அவர் அதை எதிர்க்கிறார், புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஏனென்றால், இந்த மனிதன் கிறிஸ்தவர்களைக் கைதுசெய்து கொண்டிருந்தவன். ஆனால் தேவன்: “அவன்… நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.” என்று கூறுகிறார். (அப்போஸ்தலர் 9:15).
கிருபை இங்கே புரட்சிகரமான ஒன்றாக இருக்கிறது. மன்னிப்போடு கூட, தேவன் முற்றிலும் புதிய ஒரு அழைப்பையும் தருகிறார். சவுல் பவுலாக மாறுகிறார். துன்புறுத்துபவர் ஒரு சீஷராக மாறுகிறார். அவர் அதற்குத் தகுதியானவர் என்பதால் அல்ல, கிறிஸ்து அவரை ஆட்கொண்டதால்.
அப்போஸ்தலர் 9 எவரும் தேவனுடைய கிருபை எட்டாத இடத்தில் இல்லை என்பதைக் காட்டுகிறது. அந்த அழைப்பு பெரும்பாலும் சரணடைவதிலேயே தொடங்குகிறது. ஒருவேளை மற்ற மனிதர்கள் மீதோ—அல்லது நாம் நம் மீதோ—இட்டு, சுமந்து திரியும் பட்டங்களை/பெயர்களை தேவன் ஏற்கனவே உடைத்திருக்கிறார்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இன்னும் தீவிரமான மாற்றத்தை அடைய வேண்டிய பகுதிகள் ஏதேனும் இருக்கிறதா? தேவனுக்கு நீங்கள் உங்களை அர்ப்பணிக்க வேண்டிய வழிகள் இருக்கிறதா?
நாம் இணைந்து ஜெபிப்போம்:
பரலோக பிதாவே, என் இருதயத்தை எடுத்துக்கொள்ளும், நான் தவறாகச் செல்லும் இடங்களில் என்னை மாற்றும். என் வாழ்க்கையை உம்முடைய கிருபையின் வல்லமையான சாட்சியாக மாற்றும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.