ஒரு பெரிய திட்டம்
நான் ஜெனியை சந்தித்தபோது, அவள் மத நம்பிக்கைகளின் காரணமாக அல்லாமல், சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஒரு சைவ உணவாளியாக இருந்தாள். அவள் மீண்டும் இறைச்சி சாப்பிடும்படி அவளைச் சம்மதிக்க வைக்க, “தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே,” என்ற அப்போஸ்தலர் 10:15 வசனத்தை நான் விளையாட்டாகப் பயன்படுத்தினேன். 😂
நிச்சயமாக, அவள் என்றென்றும் சைவ உணவாளியாகவே இருந்திருந்தாலும் நான் அவளை எப்போதும்போலவே நேசித்திருப்பேன், ஆனால் என் மீதான அன்பினால் அவள் மீண்டும் இறைச்சி சாப்பிடத் தொடங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, ஏனெனில் இப்போது அவள் மிகவும் சுவையான பட்டர் சிக்கனையும் பீஃப் குழம்பையும் சமைத்துத் தருகிறாள்.🤤
அப்போஸ்தலர் 10ல், வரலாற்றின் ஒரு திருப்புமுனையை நாம் காண்கிறோம். இதுவரை, நற்செய்தி முக்கியமாக யூத மக்கள் மத்தியிலேயே பரவி வந்தது. ஆனால் தேவனிடம் ஒரு பெரிய திட்டம் இருந்தது.
ரோம அதிகாரியான கொர்நேலியு, தேவனுக்குப் பயந்த ஒரு மனிதன். அவர் ஜெபம் செய்து, தர்மங்களைச் செய்து, தேவனைத் தேடுகிறார், ஆனால் அவருக்கு இன்னும் நற்செய்தி தெரியாது. அப்போது பேதுரு ஒரு தரிசனத்தைக் காண்கிறார். யூத நியாயப்பிரமாணத்தின்படி அசுத்தமான மிருகங்கள் நிறைந்த ஒரு சீலை வானத்திலிருந்து இறங்கிவருகிறது. ஒரு சத்தம்: “அடித்துப் புசி.” (அப்போஸ்தலர் 10:13) என்று சொல்கிறது.
பேதுரு மறுக்கிறார். தன் வாழ்நாள் முழுவதிலும், அவர் சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும் இடையே வித்தியாசம் பார்த்திருக்கிறார். ஆனால் தேவன்: “தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே.” (அப்போஸ்தலர் 10:15) என்று பதிலளிக்கிறார்.
பேதுரு கொர்நேலியுவின் வீட்டிற்கு வரும்போது, எல்லாம் சரியாக அமைகிறது. தேவன் மனிதர்களுக்கு இடையே எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை. பேதுரு இன்னும் பேசிக்கொண்டிருக்கும்போதே, புறஜாதிகள் உட்பட அங்கிருந்த எல்லார்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்குகிறார். வம்சாவளி, கலாச்சாரம் அல்லது மத பின்னணி ஆகியவை தேவனை அணுகுவதைத் தீர்மானிப்பதில்லை, மாறாக இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமே அதைத் தீர்மானிக்கிறது.
நாம் சில நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத எல்லைகளை அமைக்கிறோம்: யார் பொருந்துகிறார்கள்? யார் சார்ந்திருக்கிறார்கள்? ஆனால் தேவனுடைய இருதயம் நம்முடைய கட்டமைப்புக்களை விடப் பெரியது. திருச்சபை என்பது ஒரு மூடப்பட்ட வட்டம் அல்ல, மாறாக அது ஒரு திறந்த அழைப்பு.
மனிதர்கள் உருவாக்கிய எல்லைகளை தேவன் உடைத்தெறிகிறார்.
கேள்வி என்னவென்றால்: தேவனுடைய இருதயம் நம்முடைய நம்பிக்கைகளை திருத்த நாம் இடம் அளிக்கிறோமா?
யாரையும் அசுத்தமானவர் என்றோ தகுதியற்றவர் என்றோ சொல்லக்கூடாது என்பதை பேதுரு கற்றுக்கொண்டார். நீங்கள் தள்ளி வைக்கும் மனிதர்களோ அல்லது குழுக்களோ இருக்கிறார்களா? கடவுள் உங்கள் நம்பிக்கைகளைத் திருத்துவதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
தெரிந்ததோ தெரியாததோ, உணர்ந்தோ உணராமலோ உங்கள் இருதயத்தில் உள்ள, கண்ணுக்குத் தெரிகிற அல்லது தெரியாத எந்தச் சுவர்களையும் உங்களுக்கு உணர்த்தும்படி பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள், மேலும் அவற்றை தகர்த்தெறியும்படி அவரிடம் ஜெபியுங்கள்.