கனமும் தூஷணமும்
நீங்கள் நண்பர்கள் என்று நினைத்த அல்லது குறைந்தபட்சம் நட்பாக இருந்த மனிதர்கள், அப்படியே முற்றிலும் மாறி உங்களுக்கு எதிராக வந்ததை நீங்கள் எப்போதாவது அனுபவித்திருக்கிறீர்களா?
எனது இசையை விரும்பும் சிலர், நான் எடுக்கும் சில முடிவுகளையோ அல்லது நான் வெளியிடும் கருத்துக்களையோ விரும்பாதபோது, திடீரென்று சமூக ஊடகங்களில் மோசமான கருத்துக்களைப் பதிவிடத் தொடங்குவது எனக்கு பலமுறை நடந்துள்ளது. நல்லவேளையாக, அவர்களில் யாருமே அதற்காக என்னைக் கொல்ல முயலவில்லை.😅
அப்போஸ்தலர் 14ல், பவுலும் பர்னபாவும் ஜெபஆலயத்திற்குச் செல்வதைப் பற்றி நாம் வாசிக்கிறோம். அந்தியோகியாவில் ஏற்பட்ட துன்புறுத்தல், நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான அவர்களுடைய தைரியத்தையும் ஆசையையும் குறைக்கவில்லை. யூதர்களும் கிரேக்கர்களும் விசுவாசிகளாகத்தக்கதாக அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் பிரிவினையும் ஏற்படுகிறது.
அற்புதங்களைச் செய்வதற்கான வல்லமையை பவுலும் பர்னபாவும் தேவனிடமிருந்து பெற்றார்கள். லீஸ்திராவில், நடவாமலிருந்த ஒருவனை பவுல் குணமாக்குகிறார். அதற்குரிய எதிர்வினை வியப்பளிக்கிறது: தேவர்கள் மனுஷரூபம் எடுத்து இறங்கி வந்திருக்கிறார்கள் என்று மக்கள் கூட்டம் நினைக்கிறது. பவுலும் பர்னபாவும் ஏறக்குறைய ஆராதிக்கப்படுகிறார்கள். ஆனால் அடுத்த கணமே, மனநிலை மாறுகிறது. எதிராளிகள் மக்கள் கூட்டத்தை ஏவிவிடுகிறார்கள், பவுல் கல்லெறியப்பட்டு, உயிர்போகும் நிலையில் விடப்படுகிறார்.
கனம்பண்ணப்படுவதிலிருந்து தூஷிக்கப்படுவது வரை—ஒரே அதிகாரத்தில்.
ஆயினும் பவுல் மீண்டும் எழுந்து தொடர்ந்து செல்கிறார். பின்னர், சீஷர்களை திடப்படுத்த தான் எதிர்க்கப்பட்ட இடங்களுக்கும் அவர் திரும்பிச் செல்கிறார். அவருடைய செய்தி யதார்த்தமானது: “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்.” (அப்போஸ்தலர் 14:22)
இது பிரபலமான செய்தி அல்ல. ஆனால் உண்மையானது. வெற்றியும் துன்பமும் சில சமயங்களில் அருகருகே இருக்கின்றன. இயேசுவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பது என்பது தானாகவே ஒரு சுலபமான பாதையைக் குறிக்காது. ஆனால் துன்பங்களின் வழியிலும் தேவனுடைய ராஜ்யம் வளர்கிறது.
விசுவாசம் வாழ்க்கையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா, அல்லது கஷ்டமான நேரங்களிலும் தேவனை நம்புகிறீர்களா?
நாம் ஜெபிப்போம்:
பரலோகப் பிதாவே, சோதனைகளில் உறுதியாயிருக்கவும், சகிப்புத்தன்மையோடு நடக்கவும், நம்பிக்கையோடு வாழவும், கடினமான நேரங்களில் பொறுமையோடு காத்திருக்கவும், ஜெபத்தில் நிலைத்திருக்கவும் எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.