இயேசுவைப் பற்றிய தெளிவு
நான் 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தபோது, இந்திய கலாச்சாரத்தைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மனிதர்கள் உறவினர்களாக இல்லாதபோதும் ஏன் ஒருவரையொருவர் ‘அண்ணா’ அல்லது ‘அக்கா’ என்று கூப்பிடுகிறார்கள் என்பதோ, அல்லது ஒருவர் தலையை அசைக்கும்போது என்ன நினைக்கிறார் என்பதோ எனக்குப் புரியவில்லை.
நீங்கள் மனிதர்களோடு ஒன்றி இருக்க விரும்பினால் ஒரு இடத்தின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியம்; பவுல் இதை நன்றாகப் புரிந்துகொண்டிருந்தார்.
தெசலோனிக்கேயாவிலும் பெரோயாவிலும், சுவிசேஷத்திற்கு இரண்டு விதமான எதிர்வினைகளைக் காண்கிறோம்: எதிர்ப்பு மற்றும் ஆராய்தல். சிலர் கோபமடைகிறார்கள், மற்றவர்களோ பவுல் சொல்வது உண்மையா என்று பார்க்க தினமும் வேதாகமத்தை தாங்களே ஆராயத் தொடங்குகிறார்கள் (அப்போஸ்தலர் 17).
பின்னர் பவுல் தத்துவத்திற்கும் கலாச்சாரத்திற்குமான மையமாக விளங்கிய அத்தேனே பட்டணத்திற்கு வருகிறார். எங்கு பார்த்தாலும் பலிபீடங்களையும் விக்கிரகங்களையும் காண்கிறார். அவருடைய மனம் தூண்டப்படுகிறது. ஆனால் அவர் வெறுப்போடு எதிர்வினையாற்றவில்லை. மாறாக அவர், உரையாடலில் ஈடுபடுகிறார்.
அத்தேனேயில், அவர்கள் ஆராதிக்கிற “அறியப்படாத தேவனைப்” பற்றிப் பேசுகிறார். அவர்களின் உலகப் பார்வையோடு ஒத்துப்போய், அவர்களின் கவிஞர்களை மேற்கோள் காட்டிப் பேசுகிறார், ஆனால் மையத்திலிருந்து விலகவில்லை: தேவன் சிருஷ்டிகர், விக்கிரகம் அல்ல.
மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்ட ஒருவர் மூலமாக தேவன் நியாயத்தீர்ப்பு கொடுக்க நாள் குறித்திருப்பதால், ஜனங்களை மனந்திரும்பும்படி அவர் அழைக்கிறார்.
உயிர்த்தெழுதலே திருப்புமுனையான விஷயமாக இருக்கிறது. சிலர் பரியாசம் செய்கிறார்கள். மற்றவர்கள் மேலும் கேட்க விரும்புகிறார்கள். சிலர் விசுவாசத்திற்குள் வருகிறார்கள்.
சுவிசேஷம் கலாச்சாரத்திலிருந்து பிரிக்கப்பட்டது அல்ல, அதே சமயம் அது கலாச்சாரத்தால் வரையறுக்கப்படுவதும் இல்லை என்பதை அப்போஸ்தலர் 17 காட்டுகிறது. செய்தியின் சாராம்சம் குறையாமல்—இணைக்க ஞானம் தேவைப்படுகிறது.
நாமும் எண்ணங்களும் நம்பிக்கைகளும் நிறைந்த ஒரு கலாச்சாரத்தில் வாழ்கிறோம். கேள்வி என்னவென்றால்: இதை நாம் அறிந்திருக்கிறோமா? மேலும் இயேசுவைப் பற்றித் தெளிவாக இருக்க நாம் துணிகிறோமா?
நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்பதை அறிந்து வைத்திருக்கும்போது இயேசுவைப் பற்றிச் சாட்சி பகர்வது எளிதாகிறது. நீங்களாகவே தவறாமல் வேதாகமத்தை வாசித்து தியானிக்கிறீர்களா?
மேலும் சுவிசேஷத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய வழியில் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு உங்களைச் சுற்றியுள்ள கலாச்சாரத்தை நீங்கள் நன்கு அறிவீர்களா?
ஜெபிப்போம்:
பரலோகப் பிதாவே, கடவுளைத் தேடுகின்ற மனிதர்கள் நிறைந்த இவ்வுலகத்தில் உம்மைப் பற்றிச் சாட்சி பகர எனக்கு உதவி செய்யும். கலாச்சார நம்பிக்கைகளுக்கும் உம்மிடமுள்ள விசுவாசத்திற்கும் இடையே அன்போடு ஒரு பாலத்தைக் கட்ட எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.