புயலில் பிரசன்னமாயிருப்பவர்
அப்போஸ்தலர் புத்தகத்தின் வழியிலான நமது பயணத்தின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். நாம் முடிவை நெருங்கினாலும், வழியில் பல ஆச்சரியமான திருப்பங்களோடு கதை தொடர்ந்து விரிவடைகிறது.
அப்போஸ்தலர் 27ல், பவுல் ஒரு கைதியாக ரோமாபுரிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அப்போஸ்தலர் 23:11ல் தேவன் தெளிவாக பேசியதைப் போல, பவுல் ரோமாபுரிக்குச் செல்வது தேவனுடைய திட்டமாக இருந்தபோதிலும், அந்தப் பயணம் சுலபமானதாக இல்லை.
கப்பல் ஒரு கடுமையான புயலைச் சந்திக்கிறது. யூரோக்கிலிதோன் என்று அழைக்கப்படும் அந்தப் புயல் மிகவும் கடுமையானது, கப்பலில் உள்ளவர்களால் பல நாட்களாக சூரியனையோ நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை. கப்பல் அலைக்கழிக்கப்படுகிறது, கப்பலில் உள்ள மனிதர்கள் தப்பிப்போம் என்ற நம்பிக்கையை இழக்கிறார்கள்.
அந்தக் குழப்பத்தின் மத்தியில் பவுல் எழுந்து நிற்கிறார். கப்பலில் இருக்கும் யாரும் மரிக்க மாட்டார்கள் என்று தேவனுடைய தூதன் தன்னிடம் கூறியதாக அவர் விவரிக்கிறார். கப்பல் அழியும், ஆனால் மனிதர்கள் தப்புவார்கள், என்று கூறுகிறார்.
“ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 27:25).
பவுலே ஒரு கைதிதான், ஆனால் அவர் கப்பலில் நம்பிக்கை அளிக்கும் தலைவனாக மாறுகிறார். அனுபவம் வாய்ந்த மாலுமிகள் பயப்படும்போது, அவர் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் புயல்களை அனுபவிக்கிறார்கள். இவை கடினமான சூழ்நிலைகளாக இருக்கலாம்: நிச்சயமற்ற தன்மை, இழப்பு, மன அழுத்தம் அல்லது பயம் நிறைந்த சூழ்நிலைகள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், தேவன் புயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாம் ஜெபிக்கிறோம். ஆனால் இந்த அதிகாரத்தில், நாம் வேறு ஒன்றைக் காண்கிறோம்: தேவன் புயல்களை அமைதிப்படுத்தும் தேவன் மட்டுமல்ல; அவர் நம்மோடு புயலில் நடக்கும் தேவனாயுமிருக்கிறார், என்பதை.
புயல் உடனடியாக மறைந்துவிடவில்லை. கப்பல் உடைகிறது. ஆனால் தேவன் தன் வாக்குத்தத்தத்தைக் காப்பாற்றுகிறார்: அனைவரும் உயிர் பிழைக்கிறார்கள்.
தேவனுடைய உண்மையுள்ளம் என்பது, எல்லாம் எளிதாகிவிடும் என்பதைக் குறிக்கவில்லை, மாறாகக் கடினமான நேரங்களில் அவர் நம்மை வழிநடத்துகிறார் என்பதைக் குறிக்கிறது.
நீங்கள் இப்போது ஒரு புயலை எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்:
- தேவனின் எந்த வாக்குத்தத்தங்கள் உங்களை நிலைநிறுத்துகின்றன?
- பயப்படும் மற்றவர்களுக்கு, பவுலைப் போல, நீங்களும் நம்பிக்கையைக் கொண்டுவர முடியுமா?