புதிய சிந்தனை எப்படி இருக்கும்?
நமது உலகத்தைப் பார்த்து நீங்கள் எப்போதாவது சோர்ந்துபோயிருக்கிறீர்களா? நான் அப்படி உணர்வதுண்டு. போர்கள், குற்றங்கள் மற்றும் பேரழிவுகள் பற்றிய செய்திகளைப் பார்க்கும்போது, “இந்த உலகம் எங்கே போகிறது?" என்று யோசிப்பது எளிது.
ஒரு நாள், தேவன் சகலத்தையும் புதிதாக்குவார் என்ற வாக்குத்தத்தத்தை நினைவில் கொள்வது எனக்கு இதுபோன்ற தருணங்களில் உதவுகிறது:
“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்.” – வெளிப்படுத்தின விசேஷம் 21:4-5
தேவன் நமக்கு வாக்குத்தத்தம் செய்துள்ள இந்த புதிய உலகம் ஆச்சரியமாக இருக்கும், ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், புதுப்பித்தல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இங்கே இப்போதே, நமக்குள்ளேயே.
தேவன் நமக்குள்ளே புதுப்பிக்க விரும்பும் மிகவும் முக்கியமான காரியங்களில் ஒன்று நம்முடைய மனம் என்று பவுல் கூறுகிறார்:
“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இந்தென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” – ரோமர் 12:2
மறுரூபமாக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட மனம் எப்படி இருக்கும்?
அது உண்மை, கனம், ஒழுக்கம், நீதி, கற்பு, அன்பு, நற்கீர்த்தி, புண்ணியம், புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருக்கும் (பிலிப்பியர் 4:8).
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது ஒரு நேர்மறையான மற்றும் நம்பிக்கை கொண்ட மனம். அது தேவனை நம்புவதால் சமாதானமுள்ள ஒரு மனதாகவும் இருக்கிறது (ஏசாயா 26:3).
இறுதியாக, புதுப்பிக்கப்பட்ட மனம் தவறான எண்ணங்களில் நிலைத்திராமல், தேவனுக்குக் கீழ்ப்படிவதில் கவனம் செலுத்துகிறது (2 கொரிந்தியர் 10:3-6).
அப்படிப்பட்ட ஒரு மனதை நீங்கள் விரும்பமாட்டீர்களா?
இணைந்து ஜெபிப்போம்:
பரலோகப் பிதாவே, பாவம், வேதனை, துக்கம் நிறைந்த உலகில் நாங்கள் வாழும்போது, புதுப்பிக்கப்பட்ட மனதின் வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. என் சிந்தனைகளால் அல்ல, உம்முடைய சிந்தனைகளாலும், என் கவலையால் அல்ல, உம்முடைய சமாதானத்தாலும் என் மனதை நிரப்பும். என் மனதை உம்மிடம் அர்ப்பணிக்கிறேன், என்னை உமக்குச் சித்தமானபடி வழிநடத்தும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.