உங்கள் இருதயம் கல்லானதா?
'கல்லான இருதயம்' என்ற சொற்றொடரை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?
நெகிழ்வற்ற, இணங்காத அல்லது கடுமையான குணம் கொண்ட, மற்றவர்களின் உணர்ச்சிகளையோ அல்லது துன்பங்களையோ புரிந்துகொள்ளாத அல்லது பொருட்படுத்தாத ஒருவரை விவரிக்க இது பயன்படுகிறது.
அப்படிப்பட்ட யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியும்… நான் தான் 🫢
சரி, முழுமையாக இல்லை, என்னை இரக்கமற்றவள் என்றோ உணர்ச்சியற்றவள் என்றோ விவரிக்க மாட்டேன். ஆனால் என் கருத்து என்னவென்றால், நாம் அனைவருமே கடினமான இருதயங்களைக் கொண்டிருக்கிறோம்.
ஓரளவு இதயம் கல்லாவதை அனுபவிக்காமல் இந்த உலகில் வாழ்வது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.
நாம் அனைவரும் இருதயம் உடைவதையோ அல்லது காயப்படுவதையோ அனுபவித்திருக்கிறோம். ஒருவேளை நீங்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஏமாற்றப்பட்டிருக்கலாம்? அச்சுறுத்தப்பட்டிருக்கலாம் அல்லது பாகுபாடு காட்டப்பட்டிருக்கலாம்? நிராகரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவமதிக்கப்பட்டிருக்கலாம்?
நம்மைச் சுற்றியுள்ள வலிகளும், துன்பங்களும் மட்டும் அல்ல, நம்முன்னே தினமும் நடக்கும் அநீதி, நோய், வறுமை மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றின் அளவு கொஞ்ச நஞ்சமல்ல.
விஷயம் என்னவென்றால், நாம் அறியாமலோ அல்லது அறிந்தோ, நமது இருதயங்களைப் பாதுகாப்பதற்காக அவைகளைக் கடினப்படுத்துகிறோம்.
ஆனால் தேவன் நமக்காக ஒரு சிறந்த தீர்வை வைத்திருக்கிறார்:
“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.” – எசேக்கியேல் 36:26
உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவதன் மூலம் வேதனையிலிருந்து அதைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, உங்களைச் சுற்றியுள்ள உலகத்தின் மீதான அன்பினாலும் மனதுருக்கத்தினாலும் துடிக்கும் ஒரு இருதயமாக அதை உயிரோடு வைக்க தேவன் ஊக்குவிக்கிறார்.
உங்கள் இருதயத்தின் பகுதிகள் கல்லாக மாறிவிட்டதை நீங்கள் உணரும்போதெல்லாம், அதைப் புதிய, ஆரோக்கியமான சதையாக பரிமாற்றம் செய்ய நீங்கள் அவரிடம் வரலாம்.
புதிய இருதயம் மட்டுமல்ல, தேவன் உங்களுக்குப் புதிய ஆவியையும் கொடுக்க விரும்புகிறார்:
“தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.” – 2 தீமோத்தேயு 1:7
காயப்பட்டுவிடுவோம் என்ற பயமுள்ள ஆவிக்கும் கல்லான இருதயத்திற்கும் பதிலாக, சதையான இருதயமும் அன்பும் பலமும் கொண்ட ஆவியும் இருப்பது எவ்வளவோ மேலானது அல்லவா?
உங்கள் காயங்களையும் பயங்களையும் இன்றே தேவனிடம் ஒப்படையுங்கள், அவர் உங்கள் இருதயத்தையும் உங்கள் ஆவியையும் உள்ளிருந்து புதுப்பிக்கட்டும்.