உங்கள் பெயரை மாற்ற விரும்புகிறீர்களா?
உங்கள் பெயரை மாற்றுவதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? டச்சு (என் தாய்மொழி) மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் உச்சரிக்க எளிதான முதல் பெயர் அமைந்தது என் பாக்கியம். இருப்பினும், சில பெயர்கள் டச்சு கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப்படுபவையாக இருந்தாலும், ஆங்கிலத்தில் கேட்கும் போது சற்று விசித்திரமாக இருக்கும். உதாரணத்திற்கு, ‘Harm’, ‘Bas’, அல்லது ‘Floor’ 🤭என்பனபோன்ற பெயர்கள்.
நான் இந்தியாவுக்கு வந்தபோது, என் பெயருக்கு இந்தியில் துரதிர்ஷ்டவசமான அர்த்தம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. நல்லவேளையாக, அப்படி எதுவும் இல்லை. ஆனால் அப்படி இருந்திருந்தால், ஒருவேளை நான் அதை மாற்றுவதைப் பற்றி யோசித்திருப்பேன், அல்லது இந்தியாவில் அழைக்கப்படுவதற்கு வேறு ஒரு பெயரை ஏற்றுக்கொண்டிருப்பேன்.
தேவன் உங்களுக்குப் புதிய பெயரைக் கொடுக்க விரும்புகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
“ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன்”. – வெளிப்படுத்தின விசேஷம் 2:17
வெளிப்படுத்தின விசேஷம் எழுதப்பட்ட காலத்தில், வெண்மையான கல் என்பது குற்றமற்ற தன்மையைக் குறித்தது. ஒரு குற்றத்திற்காக நீங்கள் விசாரிக்கப்பட்டால், வெண்மையான கல் என்பது விடுதலையைக் குறிக்கும், அதே நேரத்தில் கருப்பு கல் குற்றவாளிக்கு வழங்கப்படும்.
வெண்மையான கல்லைப் பெறுவது என்றால், நீங்கள் ஆக்கினையினின்று நீங்கி விடுதலையடைகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் விசாரிக்கப்பட்டு பாத்திரவானாகக் காணப்பட்டுள்ளீர்கள். சிலுவையில் இயேசு நமது குற்றத்தைச் சுமந்ததால் நாம் வெண்மையான கல்லைப் பெறுகிறோம் (ஏசாயா 53:4-6).
இந்தக் கல்லின் மேல் உங்கள் புதிய பெயர் எழுதப்பட்டிருக்கும். அவரும் நீங்களும் மட்டுமே அறிந்த இந்த புதிய நாமம், உங்கள் ஆவியின் சாட்சியாகும்; தேவன் உங்களை எப்படிப் பார்க்கிறார் என்பதாகும். உங்கள் மனித சுபாவத்தின்படி நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதை அவர் பார்க்கவில்லை. உங்களுக்குள் இருக்கும் புதிய சிருஷ்டியை அவர் காண்கிறார் (2 கொரிந்தியர் 5:17).
எனது புதிய பெயரைப் பெறும் நாளை நான் எதிர்நோக்குகிறேன். நீங்கள் எப்படி?