உங்கள் பார்வையை மாற்றும் உத்தி
இந்த வாரம், தாவீது ராஜா தனது வாழ்க்கையின் மிகச் சோர்வான நிலையில் இருந்தபோது, கர்த்தருக்குள் தன்னை எவ்வாறு திடப்படுத்திக்கொண்டார் என்பதை கண்டறியும் ஒரு பயணத்தில் நாம் சென்றுகொண்டிருக்கிறோம் (1 சாமுவேல் 30:6).
கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக்கொள்வதை ஒரு முக்கியமான திறமையாக கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைகள் தாவீதின் வாழ்க்கையில் ஏராளமாய் இருந்தன. தாவீது இஸ்ரவேலின் மிகச் சிறந்த ராஜாவாக அறியப்பட்டாலும், அவரது பெயரில் பல வெற்றிகள் இருந்தாலும், அவர் இடைவிடாத போராட்டங்களையும் குறிப்பிடத்தக்க தாழ்வுகளையும் சந்தித்தார்.
தாவீது ராஜா பெயர்போன ஒரு விஷயம் என்னவென்றால், பல சங்கீதங்களை எழுதியவர் என்பதுதான். அவர் தனது இருதயத்தில் இருந்த உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் வார்த்தைகளைக் கொடுத்து, தனது வாழ்க்கையில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வையும் சங்கீதங்களின் வாயிலாக வெளிப்படுத்தினார். இந்த சங்கீதங்கள் வெறும் மகிழ்ச்சியான காலங்கள் அல்லது பெரிய சாதனைகளின் விளைவாக மட்டுமே உருவாகவில்லை; பல சங்கீதங்கள் கடினமான காலங்களில் பிறந்தவை.
உதாரணத்திற்கு:
- சவுலால் துரத்தப்பட்டபோது, அவர் சங்கீதம் 59ஐ எழுதினார்.
- காத்தூரில் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது, சங்கீதம் 56ஐ எழுத்தினார்.
- அப்சலோமிடமிருந்து தப்பி ஓடியபோது, சங்கீதம் 3ஐ எழுத்தினார்.
- யூதாவின் வனாந்தரத்தில் ஒளிந்திருந்தபோது, சங்கீதம் 63ஐ எழுத்தினார்.
இன்றைய முக்கியக் கருத்து: பிரச்சனைகளை விட்டுவிட்டு சங்கீதங்களுக்கு வாருங்கள்.
நான் சொல்வதன் அர்த்தம் என்னவென்றால், உங்கள் உணர்வுகளுக்கு வார்த்தைகளைக் கொடுங்கள். அது ஒரு குறிப்பேட்டில் எழுதுவதாக இருந்தாலும், ஒரு பாடலை இயற்றுவதாக இருந்தாலும் அல்லது ஒரு கவிதையை வரைவதாக இருந்தாலும், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது அவற்றைக் கையாள்வதற்கான ஒரு முக்கியமான படியாகும், மேலும் தாவீது இதில் வல்லுநராக இருந்தார்.
என்னுடைய மிகவும் புகழ்பெற்ற பாடல்களுள் ஒன்றான 'Tumsa', ஒரு வேதனையான காலத்தில் பிறந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் எனது மகன் ஜாக் (Zac) காலமான பிறகு என்னிடமிருந்து வெளிவந்த பாடல்கள் நிறைந்த ஒரு புதிய ஆல்பத்தில் நான் தற்போது பணியாற்றி வருகிறேன்.
ஆனால் நான் உங்களை எச்சரிக்க வேண்டும், தேவனிடம் உங்கள் ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கும்போது, உங்கள் பார்வை மாறக்கூடும். மேலும் புலம்பலாகத் தொடங்குவது பல நேரங்களில் துதிப் பாடலாக முடியும்.
இது தாவீதுக்கு எப்போதும் நடந்தது. உதாரணத்திற்கு, சங்கீதம் 13ல் அவர் இவ்வாறு தொடங்குகிறார்:
"கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர் எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?"
ஆனால் இவ்வாறு முடிகிறது:
“நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.”
கர்த்தருக்குள் உங்களைத் திடப்படுத்திக்கொள்வது என்பது மெய்யாகவே இப்படித்தான் இருக்கும்.