நம்மால் தனியாகச் சுமக்க முடியாத பாரம்
இரட்சிப்பு என்னைச் சார்ந்திருந்தால், நான் சிக்கலில் இருப்பேன். நீங்களும் கூட அப்படி உணரலாம்.
“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு”. (எபேசியர் 2:8)
கிருபை என்றால் தகுதியற்ற தயவு. அதாவது நான் அதைச் சம்பாதிக்கவில்லை. நான் அதை அடையவில்லை. அதற்கு நான் தகுதியானவன் அல்ல. தேவன் அதை நிபந்தனையின்றி கொடுக்கிறார்.
கேம்ரனும் நானும் எங்கள் வாழ்க்கையில் ஒரு காலக்கட்டத்தைக் கடந்தோம், அங்கு எங்கள் மகன் ஜாக்-கின் (Zac) மருத்துவ பராமரிப்பு மிகவும் அதிகமாகவும் முழுமையாக ஆக்கிரமிப்பதாகவும் இருந்தது, அது எங்களை உடைக்கத் தொடங்கியது. அவனது நிலைமைக் காரணமாக, அவன் மூச்சு விட முடிகிறதா என்பதை உறுதிப்படுத்த 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட வேண்டியிருந்தது மற்றும் எல்லாவற்றிற்கும் உதவி தேவைப்பட்டது. அவனது பராமரிப்பு 2 நபர்களின் முழுநேர வேலையாக இருந்தது.
எங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் நாங்கள் இருந்த சூழ்நிலையைப் பார்த்தார்கள், அவர்களில் பலர் தங்களது நேரம், உதவி மற்றும் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட பணத்தைக் கூட வழங்கி உதவினர். எங்களால் தனியாகச் சுமக்க முடியாத பாரத்தை சுமக்க உதவ அவர்கள் முன்வந்தார்கள்.
இந்த எண்ணம் இன்றும் என்னை நல்வழிப்படுத்துகிறது, ஏனென்றால் அந்த வகையான தாராள மனப்பான்மைக்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல, ஆனால் எங்கள் அன்புக்குரியவர்கள் அதை வழங்கினார்கள். அதுதான் கிருபை. இயேசு நமக்காகச் செய்ததும் அதுவே—ஒரு பிரபஞ்ச அளவில்.
கிருபை சிலுவையிலிருந்து பாய்கிறது. இயேசு நான் பெற வேண்டியதை எடுத்துக்கொண்டார், அதனால் நான் பெறத் தகுதியற்றதை என்னால் பெற முடிந்தது. எனது பாவத்தின் தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார், நான் விடுதலையையும் வாழ்க்கையையும் அனுபவிக்க அவருடைய உயிரையே கொடுத்தார்.
கிருபை பெருமையை அழிக்கிறது. என்னால் பெருமைப்பட முடியாது. என்னால் உரிமை கொண்டாட முடியாது. "இரட்சிக்கப்படுவதற்கு" போதுமான நல்ல மனுஷியாக இருக்க என்னால் எதுவும் செய்ய முடியாது. இல்லை, இயேசு இலவசமாக நமக்கு வழங்கும் மற்றும் விலைக் கொடுத்து வாங்கிய ஈவை மட்டுமே என்னால் பெற முடியும்.
இன்றைய அதிசயம் தேவனின் கிருபை, அது இப்போது உங்களுக்குக் கிடைக்கிறது.
நாம் ஒன்றாக ஜெபிப்போம்:
பரலோகப் பிதாவே, உம்முடைய கிருபைக்காக உமக்கு நன்றி. என் இரட்சிப்பு என் செய்கைகளைச் சார்ந்திருக்காமல் உம்முடைய தயவைச் சார்ந்திருப்பதற்காக நன்றி. இன்று கிருபையின் விடுதலையில் வாழ எனக்கு உதவும். என் பெருமையை அகற்றி, நீர் இலவசமாகக் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ள எனக்குக் கற்றுத்தாரும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.