எனக்கு மிகவும் பிடித்த சமூக ஊடகப் பொன்மொழி
சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பொன்மொழி சமூக ஊடகங்களில் உலா வந்தது, அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்:
“முதிர்ச்சியடைவது என்பது எல்லார் மீதும் நாம் கோபமாக இருக்கும்போது நாம் உணவு உன்ன வேண்டும் என்பதை உணர்வதாகும். உங்கள் மீது அனைவரும் கோபமாக இருக்கும்போது, நீங்கள் தூங்க வேண்டும்.” – சொன்னவர் அறியப்படாதவர்
இது மிகவும் உண்மை!
1 இராஜாக்கள் 19ல் யேசபேலிடமிருந்து தப்பி ஓடிய பிறகு, எலியா நம்பிக்கையற்றவராகவும் தோற்கடிக்கப்பட்டவராகவும் உணர்ந்தபோது இந்த உணர்தல் அவருக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன் (1 இராஜாக்கள் 19:2-4).
எலியா தன் தனிப்பட்ட வேலைக்காரனிடமிருந்து கூட தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு, ஒரு தேவதூதன் தன்னை எழுப்பி சாப்பிடக் கொடுக்கும் வரை தூங்கிவிடுகிறார் (அவர் தெளிவாக சோர்வடைந்திருந்தார் மற்றும் பசியோடு இருந்தார் என்றுத் தெரிகிறது)!
தேவன் எலியாவுக்கு அவனது அடுத்த ஆவிக்குரிய பணியைக் கொடுப்பதற்கு முன்பாக, அவனது சரீரத் தேவைகளை மிகவும் நடைமுறை வழியில் (தூக்கம் மற்றும் உணவை வழங்குதல்) முதலில் திருப்திப்படுத்துவதை நான் விரும்புகிறேன். தேவன் எலியாவின் மனித வரம்புகளைப் பராமரிக்கிறார், சரீரம் என்பது நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் ஒரு அவசியமான பகுதி என்பதைக் காட்டுகிறார்.
நமக்கும் அதுவே உண்மை. சில நேரங்களில், கிறிஸ்தவர்களாக, காரியங்களை ஆவிக்குரியதாக்குவதும், எல்லாவற்றையும் "ஆவிக்குரிய யுத்தம்" என்று முத்திரையிடுவதும் சுலபம். ஆனால் பெரும்பாலும் பதில் மிகவும் எளிமையானது. தேவன் நம்மை ஆவி, ஆத்துமா மற்றும் சரீரமாக உருவாக்கினார் (1 தெசலோனிக்கேயர் 5:23), மூன்றையும் நாம் பராமரிக்க வேண்டும்.
இதைச் செய்வதற்கான ஒரு நல்ல வழி HALT ஆகும். HALT என்பது ஒரு எளிய சுய பரிசோதனை கருவி. அது குறிப்பது:
- H — பசி (Hungry)
- A — கோபம் (Angry)
- L — தனிமை (Lonely)
- T — சோர்வு (Tired)
நீங்கள் திணறும்போது, உணர்ச்சிவசப்படும்போது, உணர்ச்சிப் பூர்வமாக சோர்ந்திருக்கும்போது அல்லது ஆரோக்கியமற்ற நடத்தைகளுக்கு ஆளாகும்போது, இந்த நான்கு நிலைகளுள் ஒன்று பெரும்பாலும் பங்களிக்கிறது என்பது இதன் கருத்து.
ஒவ்வொரு எண்ணத்தையும் உணர்ச்சியையும் உடனடியாக நம்புவதற்குப் பதிலாக, நீங்கள் இடைநிறுத்தி உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்:
- நான் பசியோடு இருக்கிறேனா?
- நான் கோபமாக இருக்கிறேனா?
- நான் தனியாக இருக்கிறேனா?
- நான் சோர்வாக இருக்கிறேனா?
எலியா நான்கு விஷயங்களின் நடுவிலும் இருந்தார் என்பதைக் கவனியுங்கள்! ஆனால் தேவன் அவரது சரீரத் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு, அவருக்குக் கட்டளையிட்டபடி நாற்பது இரவும் நாற்பது பகலும் பிரயாணம் செய்ய எலியாவால் முடிந்தது (1 இராஜாக்கள் 19:8).
அடுத்த முறை நீங்கள் சோர்வாக உணரும்போது HALT வழியை முயற்சி செய்து பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன், அது எப்படி இருந்தது என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.