உங்கள் இதயத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள்!🚰
களிமண் சுழலும் செயல்முறையில் தண்ணீர் எவ்வளவு முக்கியமானது என்பதை நான் சமீபத்தில் கற்றுக்கொண்டேன்.
களிமண் வடிவமைக்கப்பட, அது மென்மையாக இருக்க வேண்டும்.
அது கடினமாக இருந்தால், அது விரிசல் விடும், வளையாது மற்றும் அதை பயன்படுத்தமுடியாமல் போய்விடும்.
என் வாழ்க்கையில் என் இதயம் அப்படிப்பட்டதாக உணர்ந்த காலங்களும் உண்டு—கடினமான, தற்காப்புத் தன்மையுள்ள, மாற்றத்திற்கு இடம்கொடுக்காத இதயமாக. உண்மை என்னவென்றால், தன்னை ஒப்புக்கொடுக்க மறுக்கும் இதயத்தை தேவன் உருவாக்க மாட்டார். அந்த இதயம் புதியதாகவும் தேவனுடைய வழிநடத்துதலுக்கு மென்மையாகவும் மாற்றப்பட வேண்டும் என்று கெஞ்சும்போது, தேவன் அருகில் வந்து தனது சிறந்த செயல்களுள் சிலவற்றைச் செய்கிறார்! மென்மையான களிமண்ணைக் கொண்ட குயவனைப் போல (ஏசாயா 64:8).
உங்கள் இதயம் மென்மையாக இருக்கும்போது—நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இருக்கும்போது, தாழ்மையுடன் இருக்கும்போது, மற்றும் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கும்போது—தேவன் வல்லமையான ஒன்றை செய்யத் தொடங்குகிறார்.
தேவன் அளித்த இந்த அழகான வாக்குறுதியை இது எனக்கு நினைவூட்டுகிறது:
“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.” – எசேக்கியேல் 36:26
மென்மை என்பது பலவீனமல்ல. அது பதிலளிக்கும் தன்மையைக் குறிக்கிறது. தேவன் உங்களை மாற்ற அனுமதிக்க விரும்பும் மனப்பான்மையைக் குறிக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் களிமண்ணுக்கு நீரைப் போன்றவர்—ஒவ்வொரு பருவத்திலும் உங்கள் இதயத்தை எளிதில் வடிவமைக்கக்கூடியதாக வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும், நீங்கள் ஒரு தேர்வை எதிர்கொள்கிறீர்கள்: நீங்கள் தேவனுக்கு உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா… அல்லது உலகத்தின் போக்கில் போவீர்களா?
இந்த உருவாக்குதலை நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்களா அல்லது அப்படியே இருக்கப் போராடப் போகிறீர்களா? நடுநிலை என்று எதுவும் இல்லாததால் இது ஒரு கடினமான கேள்வி.
ஒப்புக்கொடுப்பதா, அல்லது ஒப்புக்கொடுக்கக் கூடாதா? இதுதான் கேள்வி. நான் இரண்டையும் முயற்சித்துவிட்டேன், எது மிகவும் சிறந்தது என்று என்னால் சொல்ல முடியும். 😉
இன்று, உங்களை ஒப்புக்கொடுக்கத் தேர்ந்தெடுங்கள். அது எளிதானது என்பதற்காக அல்ல—மாறாக உங்களை உருவாக்குகிறவரை நீங்கள் நம்புவதினால்.
இந்த ஜெபத்தில் நீங்கள் என்னுடன் இணைவீர்கள் என்று நம்புகிறேன்:
பரிசுத்த ஆவியானவரே, என் இதயத்தை மென்மையாக்கும். என்னில் உள்ள எந்தவொரு கடினத்தன்மை, பெருமை அல்லது எதிர்ப்பு ஆகியவற்றை அகற்றிப்போடும். என் வாழ்க்கையில் உமது பணிக்கு என்னை ஒப்புக்கொடுக்க எனக்கு உதவும். தாழ்மையோடு என்னை உருவாக்கி, உமது வழிநடத்துதலுக்கு என்னை பதிலளிக்கும்படி செய்யும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.