ஒரு பெயரில் என்ன இருக்கிறது?
என் பெயர் கேம்ரன் கேரி மென்டெஸ். கேம்ரன் என்ற பெயர் என் அம்மா விரும்பியதால் இட்ட பெயர் . கேரி, என் அப்பாவின் பெயரிலிருந்து வந்த பெயர். மென்டெஸ் என்ற பெயர், என் அப்பா சிறுவயதில் கோவாவில் ஒரு உறைவிடப் பள்ளியில் வளர்ந்ததால் அவர்களுடைய கடைசி பெயரை எடுத்துக்கொண்டார்.
உங்கள் பெயர் எங்கிருந்து வந்தது?
பெயர்கள் சக்திவாய்ந்தவை. பிறப்புச் சான்றிதழில் உள்ளவை மட்டுமல்ல, நமது ஆன்மாவில் ஆழமாகப் பதியக்கூடிய பெயர்களும் கூட. யாரும் பேச விரும்பாதப் பெயர்கள். தோல்வி, இழப்பு மற்றும் வருத்தத்திற்குப் பிறகு நாம் நமக்குள் முணுமுணுத்துச் சுமந்து செல்லும் பெயர்கள்.
நானே எனக்கு சூட்டிக்கொண்ட சில பெயர்களையும், அதனுடைய தாக்கத்தை பற்றி அறியாமல், பிறர் எனக்குக் கொடுத்த சில பெயர்களையும் நான் அணிந்துள்ளேன்… பொய்யன், தோல்வியாளன், பரிபூரணமில்லாதவன் போன்ற பெயர்கள்.
நீங்களும் அப்படிப்பட்டவராக இருக்கலாம்.
நாம் எப்போதும் இந்தப் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. சில நேரங்களில் அவை நம்மீது பேசப்படுகின்றன அல்லது நம் அனுபவங்களிலிருந்து வளர்கின்றன. சில நேரங்களில் - நான் நேர்மையாக சொல்லவேண்டுமென்றால் - நாமே அவற்றை வலுப்படுத்துகிறோம். நாம் அப்படி இல்லை என்றாலும், “நான் நன்றாக இருக்கிறேன்” என்று கூறுகிறோம். அந்தப் பெயர் சரியாகப் பொருந்துகிறது என்று நம்மை நாமே நம்ப வைக்கிறோம்.
ஆனால் ஆண்டவர் இந்தக் கதையில் குறுக்கிடுகிறார். அவரது வார்த்தையைக் கேளுங்கள்:
“இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.” ஏசாயா 43:1
இதைப் பார்த்தீர்களா? பிரபஞ்சத்தின் கடவுள் உங்களைப் பெயர் சொல்லி அழைக்கிறார்! ஆண்டவர் நமது உடைந்த தன்மையை புறக்கணிக்கவில்லை, ஆனால் அது நம்மை வரையறுக்க அவர் மறுக்கிறார்.
அவர் நம்மை பெயரிட்டு அழைக்கிறார்.
நாம் பற்றிக்கொண்டிருக்கும் பெயரால் அல்ல - அவர் தரும் பெயரால்.
இன்று, நான் என்னிடமே கேட்க வேண்டிய ஒன்றை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்: நீங்கள் என்ன பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளீர்கள்? அது அவமானமா? பாதுகாப்பின்மையா? உங்களால் அகற்ற முடியாத உங்கள் கடந்த காலத்திலிருந்து ஏதேனும் ஒன்றா?
நீங்கள் அவரிடம் வருவதற்கு முன்பு உங்களை நீங்களே சுத்தப்படுத்துமாறு ஆண்டவர் உங்களிடம் கேட்கவில்லை. அவர் எளிமையாகச் சொல்கிறார், “இங்கே வாருங்கள். அந்தப் பெயரையும் உங்களுடன் கொண்டு வாருங்கள் - ஆனால் அதே பெயருடன் வெளியேறுவீர்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.”
அங்குதான் செயல்முறை தொடங்குகிறது. அடுத்த சில நாட்களில், இயேசு நம்மில் அனைவருக்கும் வைத்துள்ள புதிய பெயர்களைப் பார்ப்போம். அவை ஆச்சரியமானவை, எனவே இந்த பயணத்திற்காக நீங்கள் பின்தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.