அந்தப் பெயருடன் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
என் வாழ்நாள் முழுவதும், இந்தியாவில் உள்ளவர்கள் என் பெயரைத் தவறாக உச்சரித்து வருகின்றனர். இது கேமரூன் (நாடு) முதல், கேமரா-ஆன் மற்றும் இம்ரான் வரை மாறுபடும். 🤦🏻♂️
சிறிது காலத்திற்குப் பிறகு, சிதைந்த பெயருக்கு நீங்கள் பழகிவிடுவீர்கள், ஆனால் அது சரியாகிவிடாது.
நேற்று, நமது ஆத்துமாவில் சில நேரங்களில் சிதைந்த பெயர்களை நாம் எவ்வாறு சுமக்கிறோம் என்பதையும், அது நம் வாழ்வில் எப்படி உண்மையாகிவிடுகிறது என்பதையும் பார்த்தோம். அதுதான் அடையாளத்தின் ஆபத்து. இறுதியில், நம்மைப் பற்றி நாம் எதை நம்புகிறோமோ அதுவாகவே மாறுகிறோம்.
இதுவும் ஒரு வேதாகமக் கொள்கையாகும், பழைய ஏற்பாட்டில் யாக்கோபின் வாழ்க்கையில் அது பிரதிபலிப்பதைக் காண்கிறோம்.
யாக்கோபுடைய பெயர் “சூழ்ச்சியாளன்” என்று பொருள்படும் (ஆதியாகமம் 25:26) இது ஒரு சூழ்ச்சி செய்பவர் அல்லது ஏமாற்றுபவரைக் குறிக்கிறது. அவர் அந்தப் பெயருக்கு ஏற்றவாரே வாழ்ந்தார் ஏனென்றால் அவர் ஒரு ஏமாற்றுக்காரர் மற்றும் குள்ளநரித்தனமான சூழ்ச்சியாளர் என்று அந்நாட்களில் அறியப்பட்டிருந்தார் (ஆதியாகமம் 27:36). மக்களின் பலவீனங்களை அவர் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
ஒரு கட்டத்தில், சிதைந்த பெயர் ஒரு தவறு போல் தோன்றுவது மறைந்து, அதுதான் உங்களுடைய உண்மையான அடையாளம் போல் உணரத் தொடங்குகிறது. அந்த முறிவை நாம் உள்வாங்கிக் கொள்கிறோம், அது நம் அடையாளத்தின் ஒரு பகுதியாக மாறுகிறது.
எனக்கு அப்படிப்பட்ட தருணங்கள் ஏற்பட்டுள்ளன. “இதுதான் நான். நான் இப்படித்தான் இருக்கிறேன்” என்று நான் நினைத்த நேரங்கள். அதை நீங்கள் நம்பியவுடன், மாற்றம் சாத்தியமற்றது போல் தோன்றும்.
ஆனால் ஆண்டவர் உங்களுடைய அந்தப் பரிமாணத்தை ஒப்புக்கொள்வதில்லை. அவரது கண்ணோட்டத்தைக் கேளுங்கள்:
“இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா?” – ஏசாயா 43:19
இதுதான் மாற்றத்தின் அழகு.
ஆண்டவர் வடிவத்திற்கு அப்பால் பார்க்கிறார். நடத்தைக்கு அப்பால். பட்டப்பெயருக்கு அப்பால். நீங்கள் யாராகப் படைக்கப்பட்டீர்களோ அதைக் காண்கிறார்.
யாக்கோபின் கதை எனக்கு நினைவூட்டுவது இதுவே, நாம் ஒரு குறிப்பிட்ட வழியில் வாழ்ந்தோம் என்பதற்காக நாம் எப்போதும் அந்த அடையாளத்திற்குள்ளேயே பூட்டப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தமல்ல. நமது கடந்த காலம் நம்மைப் பற்றிய பகுதிகளை விளக்கலாம், ஆனால் அவை நம்மை வரையறுக்காது.
நீங்கள் பலமுறை அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்ததாக உணரலாம். உங்கள் கதை ஏற்கனவே எழுதப்பட்டது போல்.
ஆனால் அப்படி இல்லை!
ஆண்டவர் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்.
அவர் பெயர்களை மாற்றுவதில் நிபுணர். அவர் யாக்கோபுக்கு மறுபெயரிட்டார், உங்களையும் மறுபெயரிட முடியும்! இன்று, பழைய பெயரை நியாயப்படுத்தாதீர்கள் - அதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டாம். அதை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைத் தவிர்த்து நீங்கள் யார் என்பதை ஆண்டவர் பிரிக்கத் தொடங்கட்டும்.